News June 13, 2024

அரசியல் என் குடும்பத்திற்கு தூரமில்லை: கங்கனா

image

திரைப் பிரபலத்தை விட, அரசியல்வாதியின் வாழ்க்கை மிகவும் கடுமையானது என நடிகையும், எம்.பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், தனது கொள்ளு தாத்தா சர்ஜு சிங் ரனாவத் எம்.எல்.ஏவாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் தனது குடும்பத்திற்கு தூரமில்லை எனக் கூறிய அவர், தனது முதல் படமான ‘கேங்ஸ்டர்’ படத்திற்கு பிறகு அரசியலில் சேர நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

ஏ.சி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

image

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை எம்ஜிஎம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஒருமாத காலம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News June 13, 2024

நீட் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை

image

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். நீட் கேள்வித்தாள் கசிந்ததாக எந்த தகவலும் இல்லை என்றும், நீட் தேர்வில் மாணவர்கள் சந்தித்த சவால், பிரச்னை குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன், நீட் தேர்வர்களை அரசு ஒருபோதும் கைவிடாது என்றும் அவர் உறுதி அளித்தார்.

News June 13, 2024

கல்கி 2898 ஏடி: ஹாலிவுட் கலைஞர் பரபரப்பு புகார்

image

‘கல்கி 2898 ஏடி’ டிரெய்லரில், 10 ஆண்டுகளுக்கு முந்தைய தன்னுடைய பணியை அப்படக்குழு காப்பி அடித்துள்ளதாக ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர் சுங் சோய் குற்றம்சாட்டியுள்ளார். ஹாலிவுட்டின் மார்வெல் ஸ்டுடியோஸ், டிஸ்னி மற்றும் வார்னர் பிரதர்ஸ் நிறுவனங்களில் கருத்துருவாக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றிய அவர், கலைப்படைப்புகளை அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்துவது தவறான நடைமுறை எனத் தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

தமிழகத்தில் 10,848 ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி

image

கூட்டுறவுத்துறையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதுவரை 10,848 கடைகளில் யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

News June 13, 2024

ஜூன் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

image

பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3ஆவது முறையாக பொறுப்பேற்றதும் நடைபெறும், முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 53ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், ஜூன் 22ல் நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 13, 2024

நேரில் சென்ற அமைச்சர் கீர்த்தி வரதன் சிங்

image

40 இந்தியர்களை பலி வாங்கிய குவைத் தீ விபத்து நடந்த பகுதிக்கு மத்திய இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சென்றுள்ளார். உடல்கள் கருகி, அடையாளம் தெரியாமல் இருப்பதால், அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதனை உடனிருந்து கவனித்து, இந்தியாவிற்கு உடல்களை மீட்டு வரும் பணியை அமைச்சர் செய்யவுள்ளார். இறந்தவர்களின் உறவினர்கள் இந்தியாவில் பரிதவிப்புடன் காத்துள்ளனர்.

News June 13, 2024

ராணுவத்தினரை போலீஸ் கைது செய்ய முடியுமா?

image

சட்டம்-ஒழுங்கு பிரச்னை எனில் போலீசார் யாரையும் கைது செய்யலாம். ஆனால், ராணுவத்தினர், கடற்படையினருக்கு 1973 குற்றவியல் நடைமுறை சட்ட 45ஆவது பிரிவின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாலியல், கொலை போன்ற குற்றங்களில் அவர்களை கைது செய்யலாம். மற்ற வழக்குகளில் மத்திய அரசு ஒப்புதல் இல்லாமல் கைது செய்ய முடியாது. அருகில் உள்ள ராணுவத் தலைமையகத்துக்கு தெரிவித்த பின், 2 மணி நேரம் விசாரிக்கலாம்.

News June 13, 2024

ஜெயக்குமார் மரண வழக்கில் தீவிரமெடுக்கும் விசாரணை

image

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் விசாரணை தீவிரமெடுத்துள்ளது. ஏற்கெனவே, சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி நெல்லையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், சிபிசிஐடி ஏடிஜிபி வெங்கட்ராமன், ஐஜி அன்பு ஆகியோர் வழக்கு தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்த இன்று நெல்லை செல்கின்றனர். தொடர்ந்து, உடல் கண்டெடுக்கப்பட்ட தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

News June 13, 2024

மகளிர் சுய உதவி குழுக்களின் ₹2,755 கோடி கடன் தள்ளுபடி

image

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு, 31.3.2021 தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்த ₹2,755 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. இந்த கடன் தள்ளுபடியால் 1,17,617 பேர் பயன் அடைந்துள்ளதாகவும், அதேபோல் மகளிர் சுய உதவி குழு கடன் உச்சவரம்பு ₹12 லட்சத்திலிருந்து ₹20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.

error: Content is protected !!