News March 17, 2024

மார்ச் 19, 20ல் தேமுதிக விருப்ப மனு

image

தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 19, 20ஆம் தேதிகளில் விருப்பமனு பெறலாம் என பொதுச் செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார். சென்னை தேமுதிக அலுவலகத்தில் பொதுத் தொகுதியில் போட்டியிட ₹15,000, தனித் தொகுதியில் போட்டியிட ₹10,000 செலுத்தி விருப்ப மனு பெறலாம். புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

News March 17, 2024

ஒரு நாளைக்கு இரு தொகுதிகள் பிரச்சாரம்!

image

தமிழகத்தில் ஏப்.19ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வரின் பிரச்சாரத் திட்டம் தயாராகி உள்ளது. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளை 20 நாட்களில் கவரும் வகையில், ஒரு நாளைக்கு இரு தொகுதிகள் வீதம் திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 22 திருச்சியில் இருந்து பிரச்சாரம் தொடங்க உள்ளது. ஏப்.7ல் I.N.D.I.A கூட்டணியில் உள்ள தேசியத் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

News March 17, 2024

ஒரே கட்ட வாக்குப்பதிவில் அரசியல்

image

தேர்தல் ஆணையத்தை நம்பி நாங்கள் களமிறங்கவில்லை. மக்களை நம்பி தான் களமிறங்குவதாக விசிக எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார். உ.பி., மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் 3 – 7 கட்டங்களாக தேர்தல் நடப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் ஒரே கட்ட வாக்குப்பதிவில் அரசியல் உள்ளீடு உள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், முதற்கட்ட வாக்குப்பதிவுக்கும், 7ம் கட்ட வாக்குப்பதிவுக்கும் பெரும் இடைவெளி உள்ளதாகவும் சாடினார்.

News March 17, 2024

‘GOAT’ படத்தில் நடிகர் விஜய் பாடிய பாடல்?

image

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘GOAT’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாண்டிச்சேரியைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்க உள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடலைப் பாட உள்ளதாகவும், த்ரிஷா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாடல் குறித்த அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

News March 17, 2024

சற்றுமுன்: தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு எம்.பி., எம்.எல்.ஏ., நிதி ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டதால், புதிய திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கக்கூடாது. எந்தவொரு திட்டங்களையும் தங்கள் தொகுதிகளில் தொடங்கக்கூடாது என அறிவுறுத்திய தேர்தல் ஆணையம், தொகுதிகளில் ஏற்கெனவே தொடங்கி நடைபெறும் பணிகளை தொடரலாம் என்று அறிவித்துள்ளது.

News March 17, 2024

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்

image

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் அதற்கு இபிஎஸ் தான் காரணம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார். இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமென்றும் இல்லையென்றால், அதனை முடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். முன்னதாக இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி கோரிய புகழேந்தியின் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை அணுக உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2024

வேட்பாளர்கள் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார்கள்

image

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் பாஜக கூட்டணி இறுதி செய்யப்படும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கூட்டணி அறிவித்தவுடன் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்படும் என்றார். மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பாஜக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக நாங்கள் பட்டியல் கொடுக்கவும் தயார் என்றார்.

News March 17, 2024

பள்ளி மாணவி கொடூரமாக கொலை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூரில் 11ஆம் வகுப்பு மாணவி காதலித்து வந்ததால், அவரை பெற்றோர் கொடூரமாக கொலை செய்துள்ளனர். பொதுத்தேர்வு எழுதி வந்த மாணவி கடந்த 3 நாள்களுக்கு முன் காணவில்லை. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், காதலை கைவிட மறுத்ததால், மாணவியை ஏரியில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் மகள் காணாமல் போனதாக பெற்றோர் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

News March 17, 2024

200 கோடியை நெருங்கும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’

image

சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ வசூலில் கலக்கி வருகிறது. இப்படம் உலகம் முழுவதிலும் சேர்த்து ரூ.200 கோடியை நெருங்கியதுடன், அதிகம் வசூலித்த முதல் மலையாளப்படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் ரூ.200 கோடியைத் தாண்டும் எனத் தெரிகிறது.

News March 17, 2024

2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

image

தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசெளகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!