news

News April 10, 2024

பிரதமர் ஆளுநர் மாளிகையில் தங்கலாமா?

image

தேர்தல் பரப்புரைக்காக நேற்று சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, ராஜ் பவனில் இரவை கழித்துவிட்டு காலையில் வேலூர் புறப்பட்டார். இதுகுறித்து விமர்சித்திருக்கும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, “தேர்தல் விதிமுறைகளை மீறி ராஜ் பவனில் தங்குகிறார் பிரதமர். அங்கேயே பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதையே முதல்வர் செய்தால் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளுமா?” என்று பேசியிருக்கிறார்.

News April 10, 2024

தூக்கத்தில் பற்களை நறநறவென்று கடிப்பது ஏன்?

image

சிலருக்கு தூக்கத்தில் பற்களை நறநறவென கடிக்கும் பழக்கம் இருக்கிறது. மன அழுத்தத்திற்கான வடிகால் இல்லாமல் போகும் போது இந்த பிரச்சனை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து இதுபோன்று பற்களை கடிக்கும் பழக்கம் உடையவர்கள், தற்காலிக தீர்வாக ‘சாப்ட் ஸ்ப்லின்ட்’ என்ற கிளிப்பை பயன்படுத்தலாம். நிரந்தர தீர்வுக்கு மனநல ஆலோசகரின் அறிவுரையைப் பெறுவதுடன், யோகா, தியானம் போன்றவற்றை நாடலாம்.

News April 10, 2024

தேர்தலுக்குப் பின் அதிமுக காணாமல் போகும்

image

மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஒரு திராவிட கட்சி கரைந்துவிடுமென, அதிமுகவை மறைமுகமாக குறிப்பிட்டு அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவையில் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “பாஜக ஒருமுறை ஆட்சிக்கு வந்துவிட்டால், திராவிட கட்சிகளுக்கு வாய்ப்பிருக்காது. அதிமுகவும், திமுகவும் பாஜக வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. திமுக எதிர்ப்புக்கு ஒரு கட்சி தேவையா என்று மக்கள் முடிவு செய்வார்கள்” என்றார்.

News April 10, 2024

ஒரே நாளில் 14 பேர் பலி

image

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கார் விபத்துகளில் இந்த சோகம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 6 பேரும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

News April 10, 2024

ராம நவமி யாத்திரைக்கு அனுமதி இல்லை

image

குமரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் ராம நவமி யாத்திரை நடத்த ஸ்ரீ ஆஞ்சநேயம் அறக்கட்டளை திட்டமிட்டிருந்தது. தேர்தல் பாதுகாப்பை காரணம் காட்டி போலீசார் அனுமதி மறுத்த நிலையில் அந்த அறக்கட்டளை நீதிமன்றத்தை நாடியது. மனுவை விசாரித்த ஐகோர்ட், யாத்திரைக்கு தடை சரிதான் என்று தீர்ப்பளித்தது. குமரியில் மட்டும் அனுமதிக்கலாமா என்று ஆலோசிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 10, 2024

திமுக செய்ததை மக்களுக்கு புரிய வைக்கிறோம்

image

கச்சத்தீவு விவகாரத்தில் திமுக செய்ததை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆரம்பம் முதலே திமுக இந்தப் பிரச்னையில் இருந்ததை வெளிப்படுத்தியதாக குறிப்பிட்ட அவர், அது தொடர்பான ரகசியப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், அங்கு என்ன நடந்தது என்பதை அப்போதைய திமுக முதல்வரும் ஒப்புக் கொண்டதாக ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

News April 10, 2024

மிஸ்டர் மனைவி தொடரின் நாயகி ஷபானா விலகல்

image

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் மனைவி சீரியலில் நடிப்பதில் இருந்து விலகுவதாக நடிகை ஷபானா அறிவித்துள்ளார். திங்கள்-சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தத் தொடருக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக தொடரின் நாயகியான அஞ்சலிக்கு (ஷபானா) ரசிகர் பட்டாளம் அதிகம். இந்த நிலையில், அவர் இந்த தொடரில் இனிமேல் நடிக்க மாட்டேன் எனக் கூறியுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

News April 10, 2024

தமிழக தடகள வீரருக்கு 2 ஆண்டு தடை

image

ஊக்கமருந்து விவகாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீரர் லக்‌ஷ்மணுக்கு 2 ஆண்டு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல, தடகள வீராங்கனை ஹிமானி சாண்டலுக்கு 4 ஆண்டு தடை விதித்து தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியை தழுவிய முகமது நூர் ஹசன், ஹேம்ராஜ் குர்ஜார், அஞ்சலி குமாரி ஆகியோரும் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News April 10, 2024

சைனிக் பள்ளி விவகாரத்தில் தலையிடக் கோரி கடிதம்

image

சைனிக் பள்ளிகள் நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீட்டை தடுக்க வேண்டும் என ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார். ஏற்கெனவே 33 சைனிக் பள்ளிகள் உள்ள நிலையில், தனியார் பங்களிப்புடன் 40 புதிய சைனிக் பள்ளிகளை திறக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த விஷயத்தை சுட்டிக்காட்டிய அவர், தேச நலன் கருதி தனியார்மயமாக்கல் கொள்கையை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளார்.

News April 10, 2024

தேர்தலை நிறுத்தக் கோரி மனு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தேர்தலை நிறுத்தக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் ₹1500 கோடி மதிப்பிலான சொத்துகளை வேட்புமனுவில் காட்டவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை தொகுதியில் தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மகாராஜா மனு அளித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

error: Content is protected !!