News March 18, 2024

மக்களவைத் தேர்தலில் தமிழிசை போட்டி?

image

தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ள தமிழிசை செளந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. 2019 செப்.8ல் தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற அவர், 2021 பிப்.18 முதல் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன் என விருப்பம் தெரிவித்திருந்த அவர், இன்று ராஜினாமா செய்துள்ளார்.

News March 18, 2024

நீலகிரியில் எல்.முருகன் போட்டி?

image

பாஜக தலைமை ஆணையிட்டால் மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவேன் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். பிரதமரின் தமிழக வருகை பாஜகவிற்கு மிகப்பெரிய ஊக்கத்தை தந்திருப்பதாக அவர் தெரிவித்தார். நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா களமிறக்கப்பட்டால், அவருக்கு போட்டியாக எல்.முருகனை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

News March 18, 2024

ஐசியுவில் பிரபல தமிழ் நடிகை

image

பிரபல தமிழ் நடிகை அருந்ததி நாயர் இன்று சாலை விபத்தில் சிக்கியுள்ளார். கேரளாவில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அவர் மீது கார் மோதியுள்ளது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அவர், ஐசியுவில் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. இவர் பொங்கியெழு மனோகரா, பிஸ்தா, சைத்தான் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவரது உடல்நலம் குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

News March 18, 2024

BREAKING: ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு மனு

image

பொன்முடிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்காத நிலையில், அவருக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பொன்முடியை அமைச்சராக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்த நிலையில் ஆளுநர் ரவி அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். பொன்முடிக்கு தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படவில்லை என கூறி ஆளுநர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

News March 18, 2024

அதிமுக கொடி, சின்னம் யாருக்கு?

image

2022ல் உட்கட்சி பிரச்சினை காரணமாக ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், அவர் கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்தி வந்தார். இதற்கு எதிராக இபிஎஸ் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு வரும் வரை கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஒபிஎஸ் தரப்பு உத்தரவாதம் அளித்தது. இவ்வழக்கில் இருதரப்பு வாதமும் மார்ச் 12ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று பிற்பகலில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது.

News March 18, 2024

தமிழிசையும், தேர்தல் தோல்விகளும்!

image

மக்களவைத் தேர்தலில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில், ஏற்கெனவே, அவர் 2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது. 2009 மக்களவைத் தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2006, 2011 சட்டமன்ற தேர்தல்களில் ராதாபுரம், சென்னை வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட்ட போதும் அவர் தோல்வியடைந்தார்.

News March 18, 2024

EDக்கு எதிராக முன்னாள் முதல்வர் மகள் வழக்கு

image

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 15 ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவரை மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், ED-யின் கைது சட்டவிரோதமானது என கவிதா வழக்கு தொடர்ந்துள்ளார்.

News March 18, 2024

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை

image

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 6ஆம் தேதி வெளியாகின்றன. இதனையடுத்து, B.E/B.Tech/B.Arch உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவை மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்க, பொறியியல் மாணவர் சேர்க்கை ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது. 2 லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன என்பதால், விண்ணப்பம் செய்வதற்கு ஒரு மாதம் வரை கால அவகாசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

News March 18, 2024

BREAKING: எஸ்பிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

image

தேர்தல் பத்திரம் வாங்கிய தேதி, பெயர், சீரியல் எண்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மார்ச் 21ம் தேதி மாலை 5 மணிக்குள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என SBI-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான எந்த தகவலையும் SBI வைத்துக் கொள்ளக்கூடாது. எஸ்பிஐ தாக்கல் செய்த உடன் தேர்தல் ஆணையம், அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 18, 2024

ஒரு ரூபாய் கூட நன்கொடை வாங்காத 2 கட்சிகள்

image

தேர்தல் பத்திரங்கள் மூலம் நாட்டிலேயே அதிக நன்கொடை வாங்கிய கட்சிகளின் பட்டியலில் பாஜக முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் உள்ளன. நாட்டிலுள்ள பல கட்சிகள் கோடி கோடியாக நன்கொடையை வாங்கி குவித்துள்ள நிலையில், தேர்தல் பத்திரங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் இடதுசாரி கட்சிகளான சிபிஎம், சிபிஐ ஆகிய 2 கட்சிகள் ஒரு ரூபாய் கூட நன்கொடை பெறவில்லை.

error: Content is protected !!