Vellore

News July 31, 2024

வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்

image

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அரவட்லா பகுதியை சேர்ந்த கோவிந்தன்-சின்னு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தை அழுது கொண்டிருந்ததால், குழந்தையை சமாதானம் செய்வதாக கூறி, தாயிடம் இருந்த குழந்தையை பெண் ஒருவர் வாங்கி கொண்டு நொடிப்பொழுதில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

News July 31, 2024

கொசு ஒழிப்பு பணியில் 521 பணியாளர்கள்

image

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், டெங்கு, வைரஸ் ஆகிய தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் இருக்கிறது. இதனால், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி அருந்த வேண்டும். சளி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மற்றும் நகர்புற அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். மேலும், மாவட்டம் முழுவதும் 521 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News July 31, 2024

19 வி.ஏ.ஓ.க்கள் பணியிட மாற்றம்

image

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகாவில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் வி.ஏ.ஓ.க்களை பணியிட மாற்றம் செய்து, ஆர்.டி.ஓ. கவிதா நேற்று (ஜூலை 30) உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காட்பாடி வி.ஏ.ஓ.,வாக பணியாற்றிய சுகுமார் வள்ளிமலை கிராமத்திற்கும், அங்கு பணியாற்றிய முரளி செம்பரயநல்லூர் கிராமத்திற்கும் என காட்பாடியில் 19 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News July 31, 2024

போலீசார் தீவிர சோதனை: 7 பேர் மீது வழக்குப்பதிவு

image

வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான போலீசார், நேற்று (ஜூலை 30) பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதிரடியாக நடத்திய இந்த சோதனையில், 27 மதுபாட்டில்கள் மற்றும் 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குகள், 3 பேர் மீது கஞ்சா வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News July 31, 2024

36,042 மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள 510 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 67 அரசு உதவி பெறும் பள்ளிகள் என 577 பள்ளிகள் உள்ளன. இதில், பயிலும் 27,930 மாணவர்கள், 85 மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 5789 மாணவர்கள் என மொத்தம் 707 பள்ளிகளில் 36,042 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அனைவரும் முதல்வரின் காலை உணவுத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

ஆன்லைனில் வேலையில் 5 லட்சம் மோசடி

image

வேலூரை சேர்ந்த இளம்பெண்ணுக்கு பேஸ்புக்கில் ஆன்லைனில் பகுதி நேர வேலை உள்ளதாக லிங்க் வந்துள்ளது. அதிகம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதன்படி ரூ.5 லட்சம் பணத்தை செலுத்தி உள்ளார். ஆனால் கட்டிய பணத்தை திருப்பி எடுக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த பெண் வேலூர் சைபர் கிரைம் போலீசில் இன்று புகார் அளித்தார்.

News July 30, 2024

திருவலம் மரக்கன்று நடும் விழா கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 1000 மரக்கன்றுகள் வீதம் 247 ஊராட்சிகளில் 2,47,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்  வரும் ஆகஸ்டு 1-ம்  செம்பராயநல்லூர் ஊராட்சியில் தொடங்கி வைக்கிறார். தகவலை கலெக்டர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 30) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News July 30, 2024

இன்று இரவு 10 மணி வரை மழை தொடரும்

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 27 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

News July 30, 2024

வேலூர் மாவட்டத்தில் திடீர் சதமடித்த வெயில்

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூலை 30) 100  டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. பகல் நேரத்தில் வெயிலுடன் சேர்ந்து அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

News July 30, 2024

வள்ளிமலை கோவிலில் தெப்பல் உற்சவம்

image

காட்பாடி தாலுகா வள்ளிமலையில் பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக் கிருத்திகை விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மாலை 6 மணி அளவில் தெப்பக்குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் 5 சுற்றுகள் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!