Theni

News October 21, 2024

தேனி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் கிளப் சார்பில் கோரிக்கை

image

தேனி மாவட்டத்தில் உலா வரும் போலி பத்திரிகையாளர்கள் அதிகரித்து காணப்படுவதாகவும் அவர்கள் குவாரி உரிமையாளர்கள், அரசு ஊழியர்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதாகவும் குற்றம் எழுந்து வருகிறது. இந்நிலையில், போலி பத்திரிகையாளர்கள் பணம் பறிக்கும் நோக்கில் தங்களை அணுகினால் உடனடியாக காவல்துறையினரிடம் பிடித்து ஒப்படைக்கும் படி தேனி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் கிளப் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

News October 21, 2024

தொழில் முனைவோர் கடனுதவி பெறலாம்

image

தேனியில் சிறு, குறு & நடுத்தர தொழில் முனைவோருக்கு மாவட்ட தொழில் மையம் மூலம் கூட்டுறவு வங்கி கிளைகளில் மிக குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் வரை மூலதன கடன்கள் வழங்க கருணாநிதி கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் அசையா சொத்து அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு 04546-252163 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News October 21, 2024

முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு

image

முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு குறைந்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.60 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). இந்நிலையில் தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவை 900 கன அடியில் இருந்து 833 கன அடியாக நீர்வளத்துறையினர் குறைத்துள்ளனர்.

News October 21, 2024

சுருளி அருவியில் குளிக்க அனுமதி

image

சுருளி அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று(அக்.20) காலை முதல் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கம்பம் கிழக்கு வனச்சரக அதிகாரிகள் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், சுமார் 2 மணியளவில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து சுருளி அருவியில் மீண்டும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

News October 20, 2024

ஜாமீனில் வெளிவந்த கைதி தற்கொலை

image

தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (55). இவர் போக்சோ வழக்கில் கைதான நிலையில் 2021ல் மாவட்ட மகிளா நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்த பழனிசாமி சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News October 20, 2024

தேனி அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பலி

image

தேனி முத்தாலம்பாறை ஊராட்சிக்குட்பட்ட தொப்பையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சின்னப்பெண்ணு(55). கணவரை இழந்த இவர் தனது தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று முன்தினம்(அக்.18) இரவு வீட்டின் கான்கிரீட் கூரை இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சின்னப்பெண்ணு உயிரிழந்தார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 20, 2024

தேனியில் 551 பணி ஆணை வழங்கல்

image

போடிநாயக்கனூர் சி.பி.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நேற்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில், வேலைநாடுபவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் 551 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, பெரியகுளம் எம்.எல்.ஏ. கே.எஸ். சரவணகுமார் முன்னிலையில் வழங்கி வாழ்த்தினர்.

News October 19, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

போடிநாயக்கனூரில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் உள்ள நூறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்தன. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை பெற்றனர். தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணகுமார் உள்ளிட்டோர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

News October 19, 2024

அதிக பனை விதைகளை சேகரித்தவர்களுக்கு பரிசு அறிவிப்பு

image

தேனி மாவட்டத்தில் பனை விதைகள் நடவு செய்யும் திட்டத்துக்கு அதிக எண்ணிக்கையில் பனை விதைகளை சேகரித்து வழங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி அதிக எண்ணிக்கையில் பனை விதைகளை சேகரித்து வழங்கிய சிலமலையை சேர்ந்த முருகனுக்கு முதல் பரிசு ரூ.15,000, வனத்துறை அலுவலர் வேலுச்சாமிக்கு 2வது பரிசு ரூ.10,000 வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 19, 2024

தேனி அருகே வைரஸ் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

image

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகேயுள்ள மேலப்பட்டி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகள் மோகனப் பிரியா(13). சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சிறுமி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம்(அக்.17) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!