news

News April 17, 2024

பரப்புரை நடுவே பிறந்த நாள் கொண்டாடிய திமுக வேட்பாளர்

image

திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பரப்புரை நடுவே கட்சியினருடன் இணைந்து தனது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார். கோவை தொகுதியில் போட்டியிடும் அவர், தனது 60ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். காலையில் ராமலிங்க நகரில் பரப்புரையைத் தொடங்கிய அவர், திமுக நிர்வாகிகளோடு கேக் வெட்டித் தனது பிறந்த நாளை எளிமையாகக் கொண்டாடினார். கோவை தொகுதியில் பாஜக சார்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.

News April 17, 2024

செல்ஃபோன் பயன்படுத்தினால் ஆண்மை குறையும்

image

புகைப்பிடித்தல், மது அருந்துதல், பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையுடன் செல்ஃபோனை அதிகம் பயன்படுத்தினால், ஆண்களுக்கு விந்தணுவில் டிஎன்ஏ பாதிக்கப்பட்டு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இந்த பழக்கங்கள் கொண்ட ஆண்களால், அவர்களுடைய மனைவிக்கு கருச்சிதைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர்.

News April 17, 2024

I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறும்

image

காசியாபாத் முதல் காசிப்பூர் வரை I.N.D.I.A கூட்டணி வெற்றி பெறும் என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் பாஜகவின் முகத்திரை கிழிந்துள்ளதாகக் கூறிய அவர், 2014இல் ஆட்சிக்கு வந்தவர்கள் 2024இல் காணாமல் போவார்கள் என்று தெரிவித்தார். தங்கள் கூட்டணி மக்களுக்குப் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளதாகவும், வறுமையை ஒழிக்கக்கூடிய பல அம்சங்கள் காங். தேர்தல் அறிக்கையில் உள்ளதாகவும் கூறினார்.

News April 17, 2024

OTT-க்கு வரும் ‘ரணம்’

image

நடிகர் வைபவ் நடித்துள்ள ‘ரணம்’ திரைப்படம், வரும் 19ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. வைபவ்வின் 25ஆவது படமான இதில், நந்திதா, தன்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷெரிப் இயக்கத்தில் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம், கடந்த பிப். 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சடலங்களை வைத்து நடைபெறும் அவலத்தைப் பற்றிய விழிப்புணர்வுப் படம் என்பதால், அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டும்.

News April 17, 2024

மோடி ஊழலின் சாம்பியன்: ராகுல்

image

பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் அரசியல் சாசனத்தையும், ஜனநாயக அமைப்பையும் அழிக்க முயற்சிக்கின்றன; மறுபுறம் I.N.D.I.A. கூட்டணி அவற்றைப் பாதுகாக்க முயற்சிக்கிறது என ராகுல் தெரிவித்தார். மோடி ஊழலின் சாம்பியன் என்பதை மக்கள் அறிவார்கள். பாஜக தங்கள் கட்சியில் ஊழல்வாதிகளை வைத்துக் கொள்வது மட்டுமின்றி ஊழல் பணத்தையும் வைத்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணம் பறிக்கும் திட்டம்தான் தேர்தல் பத்திரம் திட்டம் என்றார்.

News April 17, 2024

தேர்தல் பணியில் மரணம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

image

நாமக்கல்லில் தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ.15 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஜெயபாலனுக்கு சேந்தமங்கலம் வாக்குச்சாவடி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஏப்.7ஆம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ஆம் கட்ட பயிற்சியை முடித்து வரும் போது நிகழ்ந்த விபத்தில் ஜெயபாலன் உயிரிழந்தார்.

News April 17, 2024

அனைவரும் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும்

image

அனைவரும் வாக்குப்பதிவு செய்து ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று இபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். நமக்கான இயக்கம், நமக்கான ஆட்சி எது என சிந்தித்துப் பார்த்து வாக்களியுங்கள். தமிழ்நாட்டின் கோரிக்கை, உரிமைகளை வென்றெடுக்க முழு அங்கீகாரத்தை வழங்க வேண்டும். எனவே, அதிமுகவின் இரட்டை இலை, கூட்டணி கட்சி வேட்பாளர்களின் சின்னங்களை தேடிப் பார்த்து வாக்களிக்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறினார்.

News April 17, 2024

தேர்தலுக்குப் பின்பு மெகா திட்டங்கள்

image

மக்களவைத் தேர்தலுக்குப் பின்பு 100 நாள்களுக்கான திட்டங்களுடன் இந்திய ரயில்வே தயாராக உள்ளது. அதில், ரயில் பயணிகளுக்கு ‘பீமா யோஜனா’ இன்சூரன்ஸ் திட்டம், 24 மணிநேரத்தில் ரீபண்ட், பயணச்சீட்டு முன்பதிவுக்குப் பல்வேறு அம்சங்களுடன் கூடிய பிரத்யேகச் செயலி, படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்கள் இயக்கம் ஆகியவை அடங்கும். தேர்தலுக்குப் பின் பதவியேற்கும் புதிய அரசு இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது.

News April 17, 2024

உலகக் கோப்பையில் கவனம் செலுத்தும் இந்திய அணி

image

டி20 உலகக் கோப்பைத் தொடரில், ரோஹித் – கோலி ஆகியோர் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ரோஹித், டிராவிட், அஜித் அகர்கர் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், நடப்பு ஐபிஎல் தொடரில் பாண்டியா பந்துவீச்சில் கவனம் செலுத்துதல், ஷுப்மன் கில்லை பேக்கப் ஒப்பனராக்குதல், ரியான் பராக்கை அணியில் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டது.

News April 17, 2024

பாஜக 150 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது

image

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்திக்குமென காங்கிரஸ் எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார். உ.பி., காசியாபாத்தில் பேட்டியளித்த அவர், 150 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது என்றார். மேலும், பிரதமர் மோடி ஊழலின் தலைவராக இருக்கிறார். பாஜக ஊழல்வாதிகளை மட்டுமின்றி, ஊழல் பணத்தையும் வைத்துள்ளது என்று விமர்சித்த ராகுல், உ.பியில் I.N.D.I.A கூட்டணி அதிக இடங்களில் வெல்லுமென நம்பிக்கை தெரிவித்தார்.

error: Content is protected !!