India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உழவர்கள் மேம்பாட்டுக்காக ₹10 கோடி மதிப்பில் முந்திரி வாரியம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ₹1.60 கோடி நிதி ஒதுக்கீடு, பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பலா சாகுபடியை ஊக்குவிக்க ₹5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை உறிஞ்சி வேளாணை அழிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பட்ஜெட்டில் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 2,500 ஏக்கரில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி, அங்கு மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு இது சரியான வழியாக இருக்கும் என விவசாயிகள் கருதுகின்றனர்.
2025 – 26 நிதியாண்டில் விவசாயிகளின் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய ₹1,472 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ₹10,346 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத்தொகை ₹215லிருந்து ₹349ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
உழவர்கள் கூடுதல் வருவாய் ஈட்டும் வகையில், உயர் மதிப்புமிக்க சந்தனம், செம்மரம், மகோகனி, ஈட்டி மர வகைகளை வளர்க்கும் நடைமுறைகள் எளிதாக்கப்படும் என வேளாண் அமைச்சர் உறுதியளித்துள்ளார். இந்த மரங்களை வளர்ப்பது, பதிவு செய்வது, வெட்டி விற்பனைக்கு எடுத்துச்செல்வது ஆகியவை இதன் மூலம் எளிதாகும் எனவும், இதற்காக தமிழ்நாடு வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேளாண் பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகளுக்கான அசத்தலான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இ-வாடகை செயலி மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் 130 வேளாண் வாடகை மையங்கள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் கடைபிடிக்கப்படும் உயரிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள 100 முன்னோடி விவசாயிகள், அந்நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அங்குள்ள தொழில்நுட்பங்களை கண்டுணர்ந்து, தங்களது வயல்களில் அமல்படுத்த ஏதுவாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ₹2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நத்தம் புளி, நல்லூர் வரகு, ஆயக்குடி கொய்யா, வேதாரண்யம் முல்லை, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுவரை 35 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நகரங்கள், கிராமப்புற மக்களின் ஊட்டச்சத்துகளை பாதுகாக்க 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் எலுமிச்சை, கொய்யா செடிகளின் தொகுப்பு வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், *பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ₹2.40 கோடியில் சிறப்புத் திட்டம். *ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ₹1 கோடி. *15 லட்சம் குடும்பங்களுக்கு காய்கறிகள் விதை தொகுப்பையும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
புரதச்சத்து நிறைந்த காளான் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்காக ஊரகப் பகுதியில் 5 காளான் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். ₹50 கோடியில் வேளாண் விளை பொருட்களுக்கான 100 மதிப்புக்கூட்டு மையங்கள் திறக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
தமிழக வேளாண் பட்ஜெட்டில் மல்லி சாகுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, மொத்தம் 3,000 ஏக்கர் பரப்பில் 7,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் மல்லி சாகுபடியை ஊக்குவிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மதுரை மல்லி சாகுபடியை அதிகப்படுத்த சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.