news

News May 8, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுது

image

விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பழுது ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 39 சிசிடிவி கேமராக்களில், தற்போது மழை மற்றும் பலத்த காற்றால் 7 சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளன. இங்கு ஏற்கெனவே ஒரு முறை சிசிடிவி கேமரா பழுதான போது, மீண்டும் இது போன்று அசம்பாவிதம் நடக்காமல் கண்காணிக்கும்படி விசிக மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 8, 2024

நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு

image

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக மருத்துவ விடுப்பு எடுத்து வருகின்றனர். இதனால் விமான சேவை பாதித்து, நேற்றிரவு 70 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கோரியுள்ள ஏர் இந்தியா, முழுக் கட்டணத்தையும் திரும்பத் தருவதாகவும், மற்றொரு தேதியில் பயணிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஊழியர்கள் விடுப்புக்கான காரணம் குறித்த தகவல் தெரியவில்லை.

News May 8, 2024

தள்ளிப்போகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

image

விக்கிரவாண்டிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. MLA புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி 7ஆவது கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை.

News May 8, 2024

3 ஆண்டு திமுக ஆட்சி சாதனையல்ல, சோதனை: EPS

image

ஆட்சிக்கு வந்து நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில், இபிஎஸ் அதனைக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக அரசின் 3 ஆண்டுகால ஆட்சி சாதனை அல்ல, வேதனை. ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்யாத, வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஏமாற்று மாடல் அரசு என்று சாடிய அவர், 3 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கி மக்களை கடனாளியாக்கியதுதான் இந்த அரசின் சாதனை என குற்றம்சாட்டினார்.

News May 8, 2024

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைய சேவை

image

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய சேவை வழங்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடினமான பாடங்களை மாணவர்கள் எளிமையாக காணொலி வாயிலாக கற்பதற்கும், கற்ற பாடங்களை ஆன்லைன் மதிப்பீடுகள் மூலமாக பயிற்சிகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்படவுள்ளது.

News May 8, 2024

சஞ்சு சாம்சனுக்கு 30% அபராதம்

image

ஐபிஎல் விதிகளை மீறியதாக, ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 3ஆவது நடுவர் அவுட் எனத் தீர்ப்பு வழங்கிய பிறகும் சஞ்சு சாம்சன் கள நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். ஐபிஎல் விதிப்படி அது குற்றம். போட்டியின் போது நடுவர் சொல்லும் முடிவே இறுதியானது. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 30% அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது.

News May 8, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைவு

image

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹53,040க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹6,630க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், கிராம் ₹88.50க்கும், கிலோ ₹88,500க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹880 குறைந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News May 8, 2024

ஐபிஎல்லில் இப்படியெல்லாம் நடக்கும் தான்

image

2, 3 பவுண்டரிகளைக் கொடுக்காமல் இருந்திருந்தால், போட்டியில் வெற்றி பெற்றிருப்போம் என RR கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு எதிரான போட்டிக்கு பின் பேசிய அவர், ஒரு ஓவருக்கு 11-12 ரன்கள் என்ற விதத்தில் போட்டியை கைக்குள் வைத்திருந்தோம் என்றும், ஐபிஎல்லில் இப்படியெல்லாம் நடக்கும் என்றும் கூறினார். மேலும், இதுவரை தோற்ற 3 போட்டிகளிலும் நெருக்கமாக வந்தே தோல்வி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

News May 8, 2024

தடுப்பூசியை திரும்பப் பெற்றது ஏன்?

image

இந்தியர்களுக்கு அதிகம் செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக AstraZeneca நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயன்பாடு குறைந்ததால் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தாலும் மக்கள் மனதில் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்க விளைவுகள் காரணமாக தடுப்பூசிகள் திரும்பப் பெறப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தைத் தடுக்க முடியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

News May 8, 2024

அரசியல் வாரிசு அறிவிப்பை திரும்பப் பெற்றார் மாயாவதி

image

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தம்பி மகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததைத் திரும்பப் பெற்றார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவரை நீக்கியுள்ள மாயாவதி, அரசியலில் முதிர்ச்சி அடையும் வரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி வைப்பதாக அறிவித்துள்ளார். கட்சி நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!