news

News May 8, 2024

சஞ்சு சாம்சனுக்கு 30% அபராதம்

image

ஐபிஎல் விதிகளை மீறியதாக, ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெல்லிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், 3ஆவது நடுவர் அவுட் எனத் தீர்ப்பு வழங்கிய பிறகும் சஞ்சு சாம்சன் கள நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். ஐபிஎல் விதிப்படி அது குற்றம். போட்டியின் போது நடுவர் சொல்லும் முடிவே இறுதியானது. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 30% அபராதம் விதித்து பிசிசிஐ உத்தரவிட்டது.

News May 8, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைவு

image

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹53,040க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹6,630க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல், கிராம் ₹88.50க்கும், கிலோ ₹88,500க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹880 குறைந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News May 8, 2024

ஐபிஎல்லில் இப்படியெல்லாம் நடக்கும் தான்

image

2, 3 பவுண்டரிகளைக் கொடுக்காமல் இருந்திருந்தால், போட்டியில் வெற்றி பெற்றிருப்போம் என RR கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு எதிரான போட்டிக்கு பின் பேசிய அவர், ஒரு ஓவருக்கு 11-12 ரன்கள் என்ற விதத்தில் போட்டியை கைக்குள் வைத்திருந்தோம் என்றும், ஐபிஎல்லில் இப்படியெல்லாம் நடக்கும் என்றும் கூறினார். மேலும், இதுவரை தோற்ற 3 போட்டிகளிலும் நெருக்கமாக வந்தே தோல்வி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

News May 8, 2024

தடுப்பூசியை திரும்பப் பெற்றது ஏன்?

image

இந்தியர்களுக்கு அதிகம் செலுத்தப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக AstraZeneca நிறுவனம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயன்பாடு குறைந்ததால் திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தாலும் மக்கள் மனதில் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்க விளைவுகள் காரணமாக தடுப்பூசிகள் திரும்பப் பெறப்பட்டிருக்கலாம் என்ற எண்ணத்தைத் தடுக்க முடியவில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

News May 8, 2024

அரசியல் வாரிசு அறிவிப்பை திரும்பப் பெற்றார் மாயாவதி

image

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தம்பி மகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததைத் திரும்பப் பெற்றார். கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து அவரை நீக்கியுள்ள மாயாவதி, அரசியலில் முதிர்ச்சி அடையும் வரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி வைப்பதாக அறிவித்துள்ளார். கட்சி நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News May 8, 2024

3ஆம் கட்டத் தேர்தலில் 64.4% வாக்குப்பதிவு

image

மக்களவைத் தேர்தலுக்கான 3ஆவது கட்ட வாக்குப்பதிவு 93 தொகுதிகளில் நேற்று நடந்து முடிந்தது. இதில் 64.4% வாக்குப்பதிவாகி உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அசாம் – 81.61%, மேற்கு வங்கம் – 75.79%, கோவா – 75.20%, சத்தீஸ்கர் – 71.06%, கர்நாடகா – 70.41%, டையூ டாமன் – 69.87%, ம.பி. – 66.05%, மகாராஷ்டிரா – 61.44%, குஜராத் – 58.98%, பிஹார் – 58.18%, உ.பி. – 57.34% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

News May 8, 2024

கைரேகை பதியாவிட்டாலும் கேஸ் சிலிண்டர் பெறலாம்

image

வாடிக்கையாளர்களின் உண்மைத் தன்மையைச் சரி பார்க்க, கேஸ் நிறுவனங்கள் அவர்களின் கைரேகை பதிவு செய்து வருகின்றன. பலர் கைரேகை பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில், அவர்களால் கேஸ் சிலிண்டர் பெற முடியாதா என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், கைரேகை பதியாவிட்டாலும் வாடிக்கையாளர்கள் கேஸ் சிலிண்டர் பெறலாம் எனத் தெரிவித்துள்ளன.

News May 8, 2024

தமிழகத்தின் முதல் பாஜக MLA வேலாயுதன் காலமானார்

image

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதன் (74) இன்று காலமானார். 1996 பேரவைத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் முதல் எம்எல்ஏ என்ற பெருமையைப் பெற்றார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News May 8, 2024

சிறுவனைக் கடித்த காவலரின் வளர்ப்பு நாய்

image

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வந்த், ஆலந்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு காவலர் குடியிருப்பில் உள்ள அத்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவனை, அதே குடியிருப்பில் உள்ள சைபீரியன் ஹஸ்கி இன வளர்ப்பு நாய் கடித்தது. இதில் சிறுவனின் கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து நாயின் உரிமையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

ஆவினுக்கு போட்டியாக களம் இறங்கும் அமுல்

image

தமிழ்நாட்டில் ஆவினுக்கு போட்டியாக அமுல் நிறுவனம் தயிர், லஸ்ஸி உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனையைத் தொடங்கியுள்ளது. இரண்டு மாதங்களில் பால் விற்பனையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அமுல் வரவால் ஆவினின் பால் விற்பனை குறைய வாய்ப்புள்ளது. முன்னதாக, அமுல் பால் விற்பனையில் ஈடுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!