news

News June 21, 2024

T20 WC: இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா மோதல்

image

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன. முந்தைய சூப்பர் ஆட்டங்களில் இரு அணிகளும் முறையே வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்க அணிகளை வீழ்த்தி தலா 2 புள்ளிகளை பெற்றுள்ளது. இரண்டு அணிகளுமே வலுவான அணிகள் என்பதால், இன்றைய போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

News June 21, 2024

மாதம் ₹5000 பராமரிப்புத் தொகை: ஸ்டாலின்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் தலா ₹5000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் வரை, பாதுகாவலர்களின் பராமரிப்பு செலவுக்காக இந்தத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பெற்றோர் இருவரையும் அல்லது ஒருவரை இழந்துள்ள குழந்தைகளுக்கு இந்தத் தொகை கிடைக்கும்.

News June 21, 2024

பட்டப் படிப்பு வரை கல்விக் கட்டணம் இலவசம்: ஸ்டாலின்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தில், தாய்-தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். குறிப்பாக, அவர்கள் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் என அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசே வழங்கும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.

News June 21, 2024

சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு பிறகு பேசிய அக்கட்சி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், கள்ளச்சாராயத்தை தடுப்பதில் அரசு தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். தமிழ்நாட்டில் இனி இதுபோன்ற மரணங்கள் நிகழக்கூடாது என்ற அவர், தமிழக அரசு அதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

News June 21, 2024

விஷச்சாராய பலி குறித்து அரசு அறிக்கை அளிக்க வேண்டும்

image

கள்ளச்சாராய விவகாரத்தில் கடந்த ஓராண்டாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மரக்காணத்தில் 14 பேர் பலியான போதும் எப்படி தொடர்ந்து விஷச்சாராயம் விற்க அனுமதி அளிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மனித உயிர்கள் தொடர்பான பிரச்னை என்பதால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது எனக் கூறியது. மேலும், தமிழக அரசு இவ்விவகாரத்தில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

News June 21, 2024

விஜய்யின் ‘THE GOAT’ 2ஆவது சிங்கிள் நாளை வெளியீடு

image

வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘THE GOAT’. யுவன் இசையில் இப்படத்தில் விஜய் பாடிய 1st சிங்கிள் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளையொட்டி, நாளை மாலை 6 மணிக்கு இப்படத்தின் ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற 2வது பாடல் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன், இப்பாடலை விஜய் பாடியுள்ளதையும் உறுதி செய்துள்ளது.

News June 21, 2024

சட்டப்பேரவையில் இருந்து பாமக வெளிநடப்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி, பாமக எம்எல்ஏ.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இதையடுத்து பேசிய ஜி.கே.மணி, சந்துக்கடை என்ற பெயரில் சாராய விற்பனை நடப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், மதுக்கடைகளை மூடுவோம் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? என கேள்வி எழுப்பியதுடன் மதுபானம் போலவே கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் விற்பனையால் மாணவர்கள் சீரழிவதாக வேதனை தெரிவித்தார்.

News June 21, 2024

கெஜ்ரிவாலின் ஜாமின் நிறுத்தி வைப்பு

image

புதிய மதுபான கொள்கை ஊழல் முறைகேட்டில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமின் வழங்கப்பட்டது. இன்னும் சில மணி நேரங்களில் சிறையில் இருந்து வெளிவருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் அவரது ஜாமினை நிறுத்தி வைத்துள்ளது. அமலாக்கத்துறையின் மனுவை விசாரிக்கும் வரையில், ஜாமின் நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

News June 21, 2024

நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவு

image

தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டுமென மாவட்ட நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள் மற்றும் சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை நேரடியாகச் சென்று உடனே செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, நேற்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற விஜய், அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

News June 21, 2024

ஆளுநரை சந்திக்கும் அதிமுகவினர்

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், ஆளுநர் ரவியை சந்திக்க அதிமுகவினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, பேரவையில் விவாதிக்குமாறு தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து, நடவடிக்கையை ரத்து செய்த சபாநாயகர், அவர்கள் மீண்டும் அவைக்கு வர அழைப்பு விடுத்தார். அதனை நிராகரித்த அதிமுகவினர், ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

error: Content is protected !!