news

News June 29, 2024

இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, இடி – மின்னலுடன் மழை பெய்யும்போது, பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மரத்தடியின் கீழ் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 29, 2024

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீட்டிப்பு

image

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்து ஆளுநர் ரவி உத்தரவிட்டுள்ளார். ஜெகன்நாதன் மீது ஊழல் புகார்கள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, அவரது பதவியை நீட்டிக்க விடாமல் தமிழக அரசு தடுக்கும் என அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார். இந்நிலையில், அதையும் மீறி ஜெகநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

News June 29, 2024

திமுக எம்எல்ஏக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ்

image

அவதூறு நோட்டீஸ் தொடர்பாக திமுக எம்எல்ஏக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். நடந்த சம்பவத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்ததாகவும், தனக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய விற்பனைக்கு, திமுக எம்எல்ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் உள்ளிட்டவர்களே முக்கிய காரணம் என ராமதாஸ் கூறியிருந்தார்.

News June 29, 2024

ஆதார் மூலம் கேஸ் மானியம் பெறுவது எப்படி? (1/2)

image

வீடுகளுக்கு ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டரை மானிய விலையில் எண்ணெய் நிறுவனங்கள் அளிக்கின்றன. இந்த தொகை வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர் வங்கிக் கணக்கிலும், கேஸ் இணைப்பிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருப்பது அவசியமாகும். அப்படி இணைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை வரவு வைக்கப்படும்.

News June 29, 2024

ஆதார் மூலம் கேஸ் மானியம் பெறுவது எப்படி? (2/2)

image

கேஸ் இணைப்புடன் ஆதாரை சேர்க்க கேஸ் நிறுவன இணையதளம் சென்று, விண்ணப்பம் 2ஐ பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து அடையாள சான்றுடன் இணைத்து நேரிலோ, தபாலிலோ அனுப்பலாம். 1800-2333-555 என்ற எண்ணை அழைத்தும் ஆதாரை இணைக்கலாம். www.rasf.uiadai.gov.in இணையதள பக்கம் சென்று, அதிலுள்ள வழிமுறையை பின்பற்றியும் ஆதாரை இணைத்து மானியம் பெற முடியும்.

News June 29, 2024

வசூலை வாரி குவித்த ‘கல்கி 2898 ஏ.டி’

image

நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கல்கி 2898 ஏ.டி’. மகாபாரத கதையையும், நவீன அறிவியல் வளர்ச்சியையும் இணைத்து, பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இப்படம் வெளியான 2 நாள்களில், ₹298.5 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News June 29, 2024

எஸ்.சி., எஸ்.டி. ஆணைய தலைவர் வயது வரம்பு உயர்வு

image

ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆணைய தலைவர் பதவிக்கான வயது உச்சவரம்பு உயர்வுக்கான சட்ட மசோதாவை அமைச்சர் கயல்விழி, பேரவையில் தாக்கல் செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வயது உச்சவரம்பு 70ஆக இருந்த நிலையில், தற்போது 75ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News June 29, 2024

டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை குறைப்பு?

image

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், 5,329 டாஸ்மாக் கடைகளில் 500 கடைகள் மூடப்பட்டது. தற்போது அதேபோல், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பால், விரைவில் டாஸ்மாக் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News June 29, 2024

பாலங்கள் இடிந்து விழுவது தான் சாதனையா?: தேஜஸ்வி யாதவ்

image

பிஹாரில் 9 நாள்களில் 5 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளதாக அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இரட்டை எஞ்சின் அரசில் மாநிலத்தில் பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகி வருவதாக விமர்சித்த அவர், இதைக் கூட ஊழல் என்று ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு மனம் வரவில்லை என்று குற்றம் சாட்டினார். பாலம் இடிவது தொடர்பாக மாநில அரசு, அதிகாரிகளை ஒரு வாரத்தில் அறிக்கை அளிக்க வலியுறுத்தியுள்ளது.

News June 29, 2024

அசுர வளர்ச்சி பெறும் டிஜிட்டல் கடன்கள்

image

ஃபின்டெக் எனப்படும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில் மட்டும் ₹1,46,517 கோடி மதிப்பிலான டிஜிட்டல் கடன்களை வழங்கியுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 49% அதிகமாகும். இளைஞர்கள் அதிக அளவிலான டிஜிட்டல் கடன்களை வாங்குவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இவை வங்கிகளை விட மிக மிக அதிக வட்டியை வசூலிப்பதால், டிஜிட்டல் கடன்களை தவிர்க்கும்படி பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

error: Content is protected !!