news

News July 1, 2024

கவிதா ஜாமின் மனு தள்ளுபடி

image

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதாவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியாக வழக்குப்பதிவு செய்த நிலையில், கடந்த மார்ச் 15ஆம் தேதி அவர் கைதானார். இந்நிலையில், ஜாமின் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை,
டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

News July 1, 2024

₹1.74 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வசூல்

image

ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல், கடந்த ஆண்டை விட 7.7% அதிகரித்து, ₹1.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், ஐஜிஎஸ்டி ₹39,586 கோடியும், ஸ்டேட் ஜிஎஸ்டி ₹33,548 கோடியும் வசூலாகியுள்ளது. அதிகபட்சமாக ஏப்ரல் மாதம் ₹2.1 லட்சம் கோடி வசூலானதாகவும், முதல் காலாண்டில் ஒட்டுமொத்தமாக ₹5.57 லட்சம் கோடி வசூலானதாகவும் அறிவித்துள்ளது.

News July 1, 2024

அகழாய்வில் ராஜராஜன் கால நாணயங்கள்

image

அகழாய்வில் மிகப் பழமையான நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “கடலூர் மாவட்டம், மருங்கூரில் நடைபெறும் அகழாய்வில், ராஜராஜன் காலச்செம்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நாணயம் 23.3 மி.மீ விட்டமும் 2.5 மி.மீ தடிமனும் 3 கிராம் எடையும் கொண்டது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News July 1, 2024

நீட் மறுதேர்வு: எண்ணிக்கை குறைந்தது

image

கடந்த மே 5ல் நடைபெற்ற நீட் தேர்வில், 1,563 மாணவர்களுக்கு நேர இழப்பு காரணமாக கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையான நிலையில், கடந்த ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இதில் 750 மாணவர்கள் பங்கேற்காத நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. தேர்வு எழுதிய 813 பேரில், எவரும் முழு மதிப்பெண் பெறாததால், முழு மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை 67லிருந்து 61 ஆக குறைந்தது.

News July 1, 2024

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவரா நீங்கள்..?

image

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 5ஆம் எண் ஆதிக்கம் கொண்டவர்கள் என எண் கணித ஜோதிடர்கள் கூறுகின்றனர். தன்னம்பிக்கை, படைப்பாற்றல், அறிவாற்றல் கொண்டவர்களான இவர்கள், எந்த ஒரு விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல், தாங்கள் வைப்பதே சட்டம் என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள் எனத் தெரிவிக்கின்றனர். அதே நேரம், அன்பான இதயம் கொண்டவர்களாகவும், கருணை உள்ளம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்கள்.

News July 1, 2024

ராகுல் மரியாதையாக பேச வேண்டும்: பாஜக

image

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி மரியாதையுடன் பேச வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்புடன் ராகுல் காந்தி பேச வேண்டும் என்றும், இந்து மத நம்பிக்கைகளை அவமரியாதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News July 1, 2024

UPSC முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது

image

நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி (UPSC) சிவில் சர்வீஸ் தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் நிலை தேர்வு நடந்த நிலையில், அதன் முடிவு upsc.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள், செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெறும் மெயின் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

News July 1, 2024

மம்மூட்டி எடுத்த புகைப்படம் ₹3 லட்சத்துக்கு ஏலம்

image

மலையாள நடிகர் மம்மூட்டி எடுத்த ‘புல் புல்’ எனப்படும் ‘கொண்டைக்குருவி’ புகைப்படம் 3 லட்சத்துக்கு ஏலம் போனது. இதனை ₹3 லட்சத்துக்கு தொழிலதிபர் அச்சு உல்லட்டில் என்பவர் வாங்கியுள்ளார். கோழிக்கோட்டில் விரைவில் வர உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் இந்தப் புகைப்படம் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்துச்சூடன் அறக்கட்டளை சார்பில் இந்தப் புகைப்படக் கண்காட்சி கொச்சியில் நடைபெற்றது.

News July 1, 2024

டெட்ரா பேக்கில் மதுபானம் கூடாது: அன்புமணி

image

டெட்ரா பேக்கில் (90 மிலி) மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அரசின் முடிவு சமூகத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், டெட்ரா பேக் மது விற்பனையை அரசு செயல்படுத்த முன்வந்தால் பாமக கடுமையான போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் எச்சரித்துள்ளார். முன்னதாக, டெட்ரா பேக்கில் அரசு மது விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

News July 1, 2024

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஷாக்!

image

ஜியோ மொபைல் கட்டணம் ஜூலை 3ஆம் தேதி முதல் அதிகரிக்கவுள்ளது. இந்நிலையில், பலரும் பழைய திட்டத்தில் வேக வேகமாக ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இந்த சூழலில், ஜியோவின் பிரபலமான பிளான்களான ₹395, ₹1,559 ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ நீக்கியுள்ளது. ₹395 திட்டம் 84 நாள்கள் சேவையையும், ₹1,559 திட்டம் 336 நாள்களுக்கான சேவையையும் வழங்கி வந்தது. இந்த திட்டங்கள் பேசிக் ஃபோன் வைத்திருப்பவர்களிடம் பிரபலமானவை.

error: Content is protected !!