news

News August 16, 2024

பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

image

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு முடிவுகளை TNPSC வெளியிட்டுள்ளது. 358 காலிப் பணியிடங்களுக்கு, கடந்த ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சிபெற்ற 644 பேர், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவெண்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான விவரங்களையும் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.

News August 16, 2024

வாக்குப்பதிவுக்கான சூழல் வயநாட்டில் இல்லை: CEC

image

வயநாட்டில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழல் இல்லையென, CEC ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.பியான ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தல் தேதி இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு வாக்குப்பதிவு நடத்துவதற்கான சூழல் இல்லை என்றார். விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறினார்.

News August 16, 2024

அதிக தேசிய விருது வென்ற இசையமைப்பாளர்கள்

image

70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் ‘பொன்னியின் செல்வன் 1’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிக தேசிய விருதுகள் (7) வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார் ரஹ்மான். இளையராஜா (5), விஷால் பரத்வாஜ் (4), ஜெய்தேவ் (3) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News August 16, 2024

ஒரே நாடு ஒரே தேர்தல் வெற்று முழக்கம்: காங்கிரஸ்

image

4 மாநிலங்களுக்கு கூட, ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியாத சூழலே இருப்பதாக, காங்கிரஸ் விமர்சித்துள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹரியானாவிற்கு தேர்தல் தேதிகள் வெளியான நிலையில், மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் சேர்த்து தேர்தல் தேதிகளை எதிர்பார்த்ததாக, காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நேற்றுதான் பிரதமர், ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி உரக்க பேசியதாக குறிப்பிட்ட அக்கட்சி, ஏன் இந்த வெற்று முழக்கம் என்றும் வினவியுள்ளது.

News August 16, 2024

‘வாழை’ Vs ‘கொட்டுக்காளி’.. வெற்றி வாகை யாருக்கு..?

image

பெருங்கடலாக இருக்கும் திரைத்துறையில், சொற்பமான சிறிய படங்கள்தான் வெற்றி பெறுகின்றன. அந்த வரிசையில், ‘வாழை’, ‘கொட்டுக்காளி’ ஆகிய இரு படங்களுமே வரும் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளன. சர்வதேச அளவில் விருதுகளை குவித்த இவ்விரு படங்களும், பாசிடிவ் வைஃபோடு திரைக்கு வருவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நீங்கள் திரையில் காண காத்திருக்கும் திரைப்படம் எது…?

News August 16, 2024

மாநில நல்லாசிரியர் விருது.. கல்வித்துறை உத்தரவு

image

மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை, ஆகஸ்ட் 19க்குள் சரிபார்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் செப்.5இல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 386 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை, மாவட்ட, வட்டாரக்கல்வி அலுவலர்கள் துரிதமாக முடிக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

News August 16, 2024

சீனாவில் அதிகரிக்கும் ரோபோ டாக்ஸிகள்

image

சீனாவில் டிரைவர் இல்லாத ரோபோ டாக்ஸிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வுகான் நகரில் மட்டும் 500 டாக்ஸிகள் பயன்பாட்டில் உள்ளன. உலகில் அதிக ரோபாே டாக்ஸி நெட்வொர்க் கொண்ட நாடாக சீனா மாறியுள்ளது. அமெரிக்க நிறுவனங்களை கவரும் வகையில், சீனாவின் தொழில்நுட்ப, ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சமீபகாலமாக இதில் முதலீட்டை அதிகரித்துள்ளன. இது தங்களது வேலைக்கு ஆபத்து என, வாகன ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

News August 16, 2024

முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தந்த மார்க்கெட்

image

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தை இந்த வாரம் ஏற்ற இறக்கத்தோடு காணப்பட்டது. இந்நிலையில், வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று, சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 1.64% உயர்ந்து 80,436 புள்ளிகளுடனும், நிஃப்டி 1.65% உயர்ந்து 24,541 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. வங்கி, ஆட்டோ, FMCG, IT, ரியால்டி, உலோகம் உள்பட அனைத்துத்துறை பங்குகளும் ஏற்றத்தில் நிறைவடைந்தன.

News August 16, 2024

கூடுதல் மருத்துவர்கள் பணிபுரிய ஆணை

image

கொல்கத்தாவில், பயிற்சி பெண் மருத்துவர் கொலையை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் நாளை ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அரசு, தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவத்துறை இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், அரசு ஆஸ்பத்திரிகளில் நாளை கூடுதல் மருத்துவர்கள் பணியாற்றவும், இதனை மாவட்ட இணை, துணை இயக்குநர்கள் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

News August 16, 2024

மழையே பெய்யாத அதிசய கிராமம்

image

ஏமன் தலைநகர் சனாவில் அல்-ஹதீப் கிராமத்தில் எப்போதும் மழை பெய்வதில்லை. கடல் மட்டத்தில் இருந்து 3,200 மீ உயரத்தில் இருப்பதால், மழை மேகங்கள் குவிவதில்லை. சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2,000 மீட்டருக்குள் குவியும் என்பதால், இக்கிராமத்தின் கீழ் அடுக்குகளில் மேகங்கள் குவிகின்றன. மேலும், இந்த கிராமத்தில் நீர் ஆதாரங்கள் போதுமான அளவிற்கு இல்லாததும் மழை பெய்யாததற்கு காரணம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!