News April 10, 2024

தமிழ் எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி காலமானார்

image

மலேசிய தமிழ் எழுத்தாளர் முத்தம்மாள் பழனிசாமி, வயது மூப்பு காரணமாக காலமானார். ‘நாடு விட்டு நாடு’ ‘நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் முத்தம்மாள். குறிப்பாக ‘நாடு விட்டு நாடு’ நூலில், கோவையில் இருந்து மலேசியாவுக்கு கூலித் தொழிலாளியாக இடம்பெயர்ந்து முன்னேறியக் குடும்பத்தின் கதையை பதிவு செய்திருந்தார். இவரது மறைவுக்கு இலக்கியவாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 10, 2024

6 ஆண்டுகளில் வயதை குறைத்த பிரையன் ஜான்சன்

image

கோடீஸ்வரர்களில் ஒருவரும், பயோடெக் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான பிரையன் ஜான்சன் 6 ஆண்டுகளில் உடல் தோற்றத்தின் மூலம் வயதை குறைத்து அசத்தியுள்ளார். அவரது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. 46 வயதான அவர், வயதை குறைக்க ஆண்டுக்கு 2 மில்லியன் டாலருக்கு மேல் செலவிட்டதாக தெரிவித்துள்ளார்.

News April 10, 2024

விஜயகாந்த் நினைவிடத்தில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

image

சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு தேமுதிக மனு அளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்த விஜயகாந்தின் உடல், தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நாள்தோறும் மக்கள் அங்கு சென்று வரும் நிலையில், காவலர்கள் பற்றாக்குறை எனக் கூறி போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேமுதிக மனு அளித்துள்ளது.

News April 10, 2024

கவர்ச்சி போஸ் கொடுத்து சர்ச்சையில் சிக்கிய ரிஹானா!

image

கன்னியாஸ்திரி ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து பாடகி ரிஹானா சர்ச்சையில் சிக்கியுள்ளார். ‘இண்டர்வியூ’ இதழின் முகப்பு பக்கத்தில் இடம்பெற்ற ரிஹானாவின் புகைப்படம் கிறிஸ்தவ மதத்தை புண்படுத்துவது போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதே போல, தனது அந்தரங்கப் பகுதிகளை கைகளால் மறைத்து ரிஹானா போஸ் கொடுத்த புகைப்படமும் சர்ச்சையாகியுள்ளது.

News April 10, 2024

ரோடு ஷோ நடத்தினால் ஓட்டுப் போடுவார்களா?

image

பிரதமர் மோடியின் ஏமாற்று வேலை தமிழகத்தில் எடுபடாது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி வந்து வாகனப் பேரணி நடத்தினால் மக்கள் ஓட்டுப் போட்டு விடுவார்களா எனக் கேள்வி எழுப்பிய அவர், டெல்லியில் இருந்து அடிக்கடி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதால் யாருக்கும் எந்த பலனும் இல்லை என்றார். மேலும், யார் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

News April 10, 2024

டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா

image

டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், சமீபத்தில் ED அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜ்குமார், ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது அந்தக் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News April 10, 2024

பாமக நிர்வாகி வீட்டில் ஐ.டி. சோதனை

image

கடலூரில் உள்ள பாமக பொறுப்பாளர் சுரேஷ் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் தொகுதியில் பாமக சார்பில் தங்கர் பச்சான் போட்டியிடும் நிலையில், தேர்தல் பொறுப்பாளராக சுரேஷ் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், எருக்கன் குப்பம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

News April 10, 2024

எது உண்மையான ரம்ஜான் தேதி?

image

ரம்ஜான் பெருநாள் கொண்டாடுவதில் இருவேறு இஸ்லாமிய தரப்பினருக்கு மாற்றுக் கருத்து நிலவுவதால் சிலர் இன்றும் சிலர் நாளையும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். தமிழ்நாடு அரசின் தலைமை காஜி, நேற்று பிறை தெரியாததால் ஏப்ரல் 11ஆம் தேதி பெருநாள் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். ஆனால் அதனை ஏற்காத தவ்ஹீத் ஜமாஅத் மக்கள், இன்றே நோன்பை கைவிட்டு பெருநாள் கொண்டாடினர்.

News April 10, 2024

தமிழகம் வருகிறார் அமித் ஷா

image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகத்தில் பிரசாரம் செய்யவிருக்கிறார். ஏற்கெனவே இரண்டுமுறை அவர் தமிழகம் வருவதாக திட்டமிடப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 12ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விமானம் மூலம் மதுரை வரும் அவர், மதுரை மற்றும் சிவகங்கை பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். பின்னர், 14ஆம் தேதி காலையில் புறப்பட்டு திருவனந்தபுரம் செல்கிறார்.

News April 10, 2024

நிலவில் இந்தியர் தரையிறங்க இதுதான் முதல்படி

image

‘சந்திரயான் 4’ திட்டம் நிலவில் இந்திய வீரர்கள் தரையிறங்குவதற்கான முதல் படி என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 2040ஆம் ஆண்டுக்குள் மனிதனை நிலவில் தரையிறக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு முன்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் அவசியமாகிறது. அதன் ஒரு பகுதியாக ‘சந்திராயன் 4’ மூலம் நிலவின் சில மாதிரிகளை எடுத்து வந்து ஆராய திட்டமிட்டுள்ளாக அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!