News May 3, 2024

‘அரண்மனை 4’ எப்படி இருக்கிறது?

image

சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 4’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. த்ரில்லர், காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளது. யோகிபாபு, கோவை சரளா, விடிவி கணேஷின் காமெடி சிறப்பாக இருப்பதாகக் கூறும் ரசிகர்கள், VFX காட்சிகளும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் குடும்பத்துடன் கலகலப்பாக பார்க்கலாம் என்கிறார்கள்.

News May 3, 2024

சீமான் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

image

வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இம்மையம் அமைக்க ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என அவரது போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

தமிழக உள்மாவட்டங்களில் 5 நாள்களுக்கு வெப்ப அலை

image

இன்று முதல் 7ஆம் தேதி வரை, அடுத்த 5 நாள்களுக்கு தமிழக உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிக வெப்பநிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இன்றும் நாளையும் வட தமிழக உள்மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

News May 3, 2024

பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடாதது ஏன்?

image

மோடியின் பொய் பிரசாரத்தை பிரியங்கா காந்தி தனது தீவிரமான பரப்புரையால் ஒற்றை ஆளாக தவிடுபொடியாக்கி வருவதாக காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிடாதது குறித்து விளக்கம் அளித்த அவர், பிரியங்கா நாடு முழுவதும் பிரசாரம் செய்து வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட தொகுதிக்குள் அவர் சுருங்கிவிடக் கூடாது என்பதால் இந்த முடிவை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

News May 3, 2024

ரயிலில் அபாயச் சங்கிலி எப்படி செயல்படுகிறது?

image

ரயிலில் பயணிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அபாயச் சங்கிலி குறித்து தெரிந்திருக்கும். இதைப் பிடித்து இழுத்தால், ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் கிடைத்து அவர் ரயிலை நிறுத்துவார் என நினைப்போம். ஆனால், அது முற்றிலும் தவறு. ரயில் பெட்டிகளில் உள்ள அபாயச் சங்கிலிகள் பிரேக் பிரஷர் உடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்கும். அதைப் பிடித்து இழுக்கும்போது, பிரஷர் ரிலீஸாகி வேகம் வெகுவாகக் குறைந்து ரயில் தானாக நிற்கும்

News May 3, 2024

அயோத்திக்கு வரும் பாகிஸ்தான் பக்தர்கள்

image

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து 200 பேர் கொண்ட சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புனிதப் பயணமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு இன்று தரிசனம் செய்ய வரவுள்ளனர். பிரயாக்ராஜில் இருந்து அயோத்திக்கு சாலை மார்க்கமாக வரும் அவர்களுக்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News May 3, 2024

7030 புதிய பேருந்துகள் வாங்க அரசு முடிவு

image

இந்த ஆண்டு 7030 புதிய பேருந்துகள் வாங்கப்பட இருப்பதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தாண்டில் மட்டும் 15 ஆண்டுகள் நிறைவடைந்த 652 பேருந்துகள் கழிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக பேருந்தின் கதவு, படிக்கட்டுகள் கழன்று விபத்து நேர்ந்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர்கள், போக்குவரத்து கழகத்தை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

News May 3, 2024

6 மாவட்டங்களில் கனமழை

image

நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 7ஆம் தேதி கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என்றும் மழையின் போது மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது.

News May 3, 2024

அமேதியில் போட்டியிடும் கே.எல்.சர்மா யார்?

image

அமேதியில் காங்., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எல் சர்மா நேரு குடும்பத்தின் நம்பிக்கைக்குரியவராக கடந்த 40 ஆண்டுகளாக இருந்து வருகிறார். 1983இல் கட்சியில் இணைந்த அவர் ராஜிவ் காந்தியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார். 1991இல் ராஜிவ் மரணத்துக்கு பிறகு, அமேதி தொகுதி பொறுப்பாளரான அவர், 1999இல் அங்கு சோனியா வெற்றி பெற காரணமாக இருந்தார். இத்தனை வருட விசுவாசத்துக்கு அவருக்கு அமேதியை காங்., வழங்கியுள்ளது.

News May 3, 2024

2 தொகுதிகளிலும் ராகுல் வெற்றி பெறுவார்

image

மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில், 2 தொகுதிகளில் அவர் வெற்றி பெற்றால் எந்த தொகுதி எம்.பியாக தொடர்வார்? என அக்கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தேர்தல் முடிந்த பின் அதுபற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றும் 2 தொகுதிகளில் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் எனவும் சூளுரைத்தார்.

error: Content is protected !!