News June 19, 2024

யோகா தின விழாவில் பங்கேற்கிறார் பிரதமர்

image

மோடி 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக நாளை ஜம்மு காஷ்மீருக்கு பயணம் செய்கிறார். இருநாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் செல்லும் அவர், ₹1,500 கோடி மதிப்பிலான 84 வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், நாளை மறுநாள் ஸ்ரீநகரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News June 19, 2024

பலத்த காற்றுடன் பொளந்து கட்டும் மழை

image

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சி, செங்கல்பட்டு, ராமநாதபுரம், நாமக்கல், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பல இடங்களில் சாலையில் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இரவு 10 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News June 19, 2024

பால் கொள்முதல் விலையை உயர்த்த பரிசீலனை

image

பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். விவசாயிகளிடம் இருந்து நாள்தோறும், லட்சக்கணக்கான லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்து வருகிறது. பசும்பால் லிட்டர் ₹38, எருமைப் பால் லிட்டர் ₹47க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில், பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று, கொள்முதல் விலையை உயர்த்த பரிசீலிப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

News June 19, 2024

67 வயது தாத்தாவாக மாறிய 24 வயது இளைஞர்!

image

டெல்லி விமான நிலையத்தில் 67 வயது முதியவரை போல வேடமணிந்து, கனடா செல்ல முயன்ற 24 வயது இளைஞரை சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் கைது செய்தனர். இளமையான தோற்றம், தோல் அமைப்பு, குரல் ஆகியவற்றால் சந்தேகம் அடைந்த காவலர்கள், அவரை தனியாக அழைத்து சோதனை செய்ததில், தாடி மற்றும் மீசைக்கு வெண்மை நிற டை அடித்திருந்தது அம்பலமானது. விசாரணையில் போலி பாஸ்போர்ட் மூலம் கனடா செல்ல முயன்றது தெரியவந்துள்ளது.

News June 19, 2024

கண்ணீரில் மூழ்கிய கள்ளக்குறிச்சி

image

கள்ளச்சாராயம் குடித்ததில் அடுத்தடுத்து 9 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். அடுத்தடுத்து உயிரிழப்பதால், மா.சுப்பிரமணியனை தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலுவும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளார். அங்குள்ள சூழலை ஆய்வு செய்து, முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கப்படும். அதன்பின் ஸ்டாலினும், நாளை அங்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News June 19, 2024

பருவமழை 20% குறைந்துள்ளது: வானிலை ஆய்வு மையம்

image

ஜூன் மாதம் பருவமழை பொழிவு சராசரியை விட 20% குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில், ஜூன் 1ஆம் தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது ஜூன் 18 வரை 64.5 மி.மீ பெய்துள்ளது. இதன் மூலம், நீண்டகால சராசரியான 80.6 மில்லி மீட்டரைவிட 20% குறைவாக பதிவாகியுள்ளது. இதனிடையே, ஜூன் 12க்குப் பிறகு பருவமழையில் முன்னேற்றம் இல்லை என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

News June 19, 2024

நேர்முகத்தேர்வில் கம்பீரிடம் கேட்கப்பட்ட 3 கேள்விகள்

image

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்முகத்தேர்வில் கவுதம் கம்பீர், WV ராமன் ஆகியோரிடம் 3 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதன்படி, அணியில் உள்ள மற்ற பயிற்சியாளர்களைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? பேட்டிங், பீல்டிங் பிரிவில் உள்ள மூத்த வீரர்களை எப்படி கையாள்வீர்கள்? கேப்டனை மாற்றுவது குறித்த பார்வை மற்றும் ஐசிசி கோப்பைகளை வெல்வதில் அணியின் பின்னடைவு குறித்து கேட்கப்பட்டுள்ளது.

News June 19, 2024

கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சி விவகாரத்தில், பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. கருணாபுரத்தைச் சேர்ந்த சிலர், கோவிந்தராஜ் என்பவரிடம் சாராயம் வாங்கி குடித்ததாக தெரிகிறது. இதனால், பாதிப்பு ஏற்பட்டு ஏற்கனெவே 4 பேர் பலியான நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் தற்போது உயிரிழந்துள்ளனர். 35க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் உள்ளதால், பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

News June 19, 2024

விஜய் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு

image

நடிகர் விஜய் ஜூன் 22இல் தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். தவெக கட்சி தொடங்கிய பின் அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பல நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அன்னதானம், ஊனமுற்றவர்களுக்கு சைக்கிள், பெண்களுக்கு தையல் மிஷின் வழங்க திட்டமிட்டுள்ளார்களாம்.

News June 19, 2024

10ஆம் வகுப்பு துணைத்தேர்வு 24ஆம் தேதி ஹால் டிக்கெட்

image

ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வரும் 24ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத் தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!