News June 24, 2024

இபிஎஸ் ஏன் அப்போது பதவி விலகவில்லை?

image

கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என இபிஎஸ் கூறிய நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று இபிஎஸ் ஏன் அப்போது பதவி விலகவில்லை என CPI மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இபிஎஸ் அப்போது பதவி விலகியிருந்தால் வரவேற்றிருப்போம் எனக் கூறிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

News June 24, 2024

மாநிலங்களவை பாஜக குழுத் தலைவராக நட்டா நியமனம்

image

மாநிலங்களவை பாஜக குழுத் தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவின் தேசியத் தலைவராக இருக்கும் நட்டாவின் பதவிக்காலம், ஜூன் 30ஆம் தேதியோடு நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், அவருக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், பியூஷ் கோயல், மாநிலங்களவை பாஜக
குழுவின் தலைவராக பதவி வகித்தார்.

News June 24, 2024

பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்றால்…

image

இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்றால் இந்தியா நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என்று துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய அணிக்குள் இருக்கும் திறமையை கம்பீர் சரியாக வெளிக்கொண்டு வந்து புதிய உத்வேகத்தை அளிப்பார் எனக் கூறிய அவர், தனது மாணவன் ஒருவர் அணிக்கு பயிற்சியாளரானால் அது தனக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் என்றார்.

News June 24, 2024

அகழாய்வில் புதிய பொருள்கள் கண்டெடுப்பு

image

விருதுநகர் அருகே வெம்பக்கோட்டையில் சுடுமணலால் ஆன பெண்ணின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அகழாய்வில் புதிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து தனது X பதிவில், சுடுமணலால் ஆன பெண்ணின் தலைப்பகுதி 30.7 மி.மீ உயரமும், 25.6 மி.மீ அகலமும் கொண்டுள்ளது. கிருஷ்ணகிரி சென்னானூர் ஆய்வில், உடைந்த புதிய கற்கால கருவி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

News June 24, 2024

வாழ்த்தியவர்களுக்கு விஜய் நன்றி

image

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் நேற்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு தமிழக அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள், தவெக நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் விஜய் அறிக்கை மூலமாக நன்றி தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

பாஜகவுக்கு அளித்துவந்த ஆதரவு வாபஸ்: நவீன் பட்நாயக்

image

நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்ற அதிரடி முடிவை பிஜு ஜனதாதள தலைவர் நவீன் பட்நாயக் எடுத்துள்ளார். இக்கட்சிக்கு 9 ராஜ்ய சபா எம்பிக்கள் உள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை என்றாலும் இவர்கள் பாஜக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வந்தனர். லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஆதரவை வாபஸ் பெற்றிருக்கிறார் நவீன் பட்நாயக்.

News June 24, 2024

சீனாவுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும்: மார்கோஸ்

image

சீனா போரை தொடங்கினால் பிலிப்பைன்ஸ் ராணுவம் தரப்பில் இருந்து நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் எச்சரித்துள்ளார். தென் சீனக்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட பிலிப்பைன்ஸ் படகுகளை சீன கடற்படையினர் சேதப்படுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவித்த மார்கோஸ், சீன அரசு ஆக்கிரமிப்பு எண்ணத்தைக் கைவிடவில்லை என்றால், நிலைமை மோசமாகும் என தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

பாஸ்போர்ட், விசா என்ன வித்தியாசம்?

image

வெளிநாடு செல்ல பாஸ்போர்ட், விசா ஆகிய இரண்டுமே தேவை. சம்பந்தப்பட்ட நபருக்கு அவர் வசிக்கும் நாட்டின் அரசினால் வழங்கப்படுவது பாஸ்போர்ட். அதில் அவரின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். விசாவானது, அவர் செல்ல விரும்பும் நாட்டின் தூதரக அனுமதியாகும். இதற்கென பாஸ்போர்ட்டில் முத்திரையோ அல்லது தனி ஆவணமோ அளிக்கப்படும். இது இருந்தால் மட்டுமே அந்நாட்டுக்கு சென்றுத் திரும்ப முடியும்.

News June 24, 2024

NDA அரசின் முதல் 15 நாள்களே மோசம்: ராகுல்

image

மோடி தலைமையிலான NDA அரசின் முதல் 15 நாள் ஆட்சியை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அதில், பயங்கர ரயில் விபத்து, காஷ்மீர் தீவிரவாத தாக்குதல், நீட் மோசடி, UGC NET வினாத்தாள் கசிவு, PG நீட் தேர்வு ரத்து, பால் விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு, தண்ணீர் பற்றாக்குறை, வெப்ப அலை உயிரிழப்புகள் உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு, இவற்றுக்கு மத்தியில் மோடி ஆட்சியை தக்கவைக்க போராடி வருவதாக தெரிவித்துள்ளார்.

News June 24, 2024

அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை,ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

error: Content is protected !!