News July 12, 2024

இளைஞர்கள் திக்கற்று நிற்கிறார்கள்: கார்கே

image

நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்னைகள் மீது பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்பின்மை 6.3 சதவீதத்தில் இருந்து 9.3 சதவீதமாக அதிகரித்து, இளைஞர்களின் எதிர்காலம் பூஜ்ஜியமாகி உள்ளதாக விமர்சித்த அவர், இனியும் தன்னிச்சையான முறையில், நாட்டின் பொருளாதாரத்தை சிதைப்பது நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

News July 12, 2024

பிரதமர் புஷ்பகமல் தஹல் படுதோல்வி

image

நம்பிக்கை வாக்கெடுப்பில் நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹல் படுதோல்வியடைந்துள்ளார். பிரதமர் புஷ்பகமல் தஹலுக்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 194 வாக்குகளும் பதிவாகியுள்ளன. முன்னாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி தலைமையிலான சிபிஎன்யுஎம்எல் கட்சி, புஷ்பகமல் தஹலுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் அவர் தோல்வியடைந்துள்ளார். இதனால், அடுத்த பிரதமராக ஷர்மா ஒலியை நேபாள காங்., தலைவர் பரிந்துரைத்துள்ளார்.

News July 12, 2024

32 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 32 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், திருவாரூர், காஞ்சி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், தஞ்சை, கரூர், கோவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News July 12, 2024

நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று

image

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கடந்த 2 தினங்களாக அவர், உடல் நலம் குன்றி காணப்பட்ட நிலையில், இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதன் காரணமாக, அம்பானி இல்ல திருமண நிகழ்ச்சியில் அக்‌ஷய் குமார் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் இல்லை: சித்தராமையா

image

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்கும் வாய்ப்பு சுத்தமாக இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரியில் போதுமான நீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும், தமிழகத்திற்கு நீர் திறக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு இன்று முதல் ஜூலை 30 தேதி வரை, தினமும் 1 டிஎம்சி திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

News July 12, 2024

ஜெகன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு

image

தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ கே.ரகுராம கிருஷ்ண ராஜுவின் புகாரை தொடர்ந்து, ஆந்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உள்பட 5 பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தான் கைது செய்யப்பட்ட போது துன்புறுத்தப்பட்டதாகவும், அதற்கு ஜெகனும், அதிகாரிகளும் சதித்திட்டம் தீட்டியதாகவும் அந்த புகாரில் எம்எல்ஏ ரகுராம கிருஷ்ண ராஜு தெரிவித்துள்ளார்.

News July 12, 2024

80,893 புள்ளிகளில் சென்செக்ஸ் புதிய உச்சம்

image

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 996 புள்ளிகள் அதிகரித்து 80,893 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வர்த்தக நேரம் முடிவில் சென்செக்ஸ் 622 புள்ளிகள் அதிகரித்து 80,519 புள்ளிகளிலும், நிஃப்டி 186 புள்ளிகள் அதிகரித்து 24,502 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. டிசிஎஸ் பங்கு 6.6%, இன்போசிஸ் பங்கு 3.5%, எச்.சி.எல்.டெக், டெக் மகிந்திரா பங்குகள் தலா 3% விலை உயர்ந்தது விற்பனையானது. –

News July 12, 2024

மதுவிலக்கு சட்டத்திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

image

தமிழக அரசின் மதுவிலக்கு சட்டத்திருத்தத்திற்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்றால், ஆயுள் தண்டனையுடன் ₹10 லட்சம்
வரை அபராதமும் விதிக்கப்படும். இக்குற்ற செயல்களுக்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 66 பேர் பலியானதை அடுத்து, அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது.

News July 12, 2024

ஹிட்லர் பாணியில் கைது: டிடிவி தினகரன்

image

அரசுக்கு எதிராக பேசுபவர்கள், ஹிட்லர் பாணியில் கைது செய்யப்படுவதாக டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதை கலாச்சாரம் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், இதை தடுக்க அக்கறை காட்டாமல், தங்களை விமர்சிப்பவர்களை கைது செய்வதிலேயே அரசு ஆர்வம் காட்டி வருகிறது என்றார். முன்னதாக, அவதூறு வழக்கில் சாட்டை துரைமுருகன் நேற்று கைதாகி விடுவிக்கப்பட்டார்.

News July 12, 2024

இங்கிலாந்து அபார வெற்றி

image

WI அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ENG அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் WI அணி 121 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து விளையாடிய ENG அணி 371 ரன்கள் எடுத்தது. ஃபாலோ ஆன் பெற்று, 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய WI அணி, 136 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் குடாகேஷ் மோட்டி அதிகபட்சமாக 31* ரன்கள் எடுத்தார்.

error: Content is protected !!