News June 5, 2024

ஜூன் 7ஆம் தேதி NDA எம்.பிக்கள் கூட்டம்

image

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் ஜூன் 7ஆம் தேதி டெல்லியில் கூடவிருக்கின்றனர். அக்கூட்டத்தில் நரேந்திர மோடி மக்களவைக் குழு தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். அதன்பின் அனைத்து எம்.பிக்களின் ஆதரவு கடிதத்துடன் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார் மோடி. 8ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

News June 5, 2024

தமிழ்நாட்டில் 4.5 லட்சம் வாக்குகளைப் பெற்ற நோட்டா

image

தமிழகத்தில் நோட்டாவுக்கு 4.5 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன் விவரம்:- *ஸ்ரீபெரும்புதூர்- 26,450 *திண்டுக்கல்- 22,120 *திருவள்ளூர்- 18,978 *திருப்பூர்- 17,737 *தென்காசி- 17,165 *காஞ்சி- 16,965 *சேலம் 14,894 * பொள்ளாச்சி- 14,503 * ஈரோடு- 13,983. வடசென்னை, மதுரை, தஞ்சை, தேனி, திருச்சி, கோவை, நாமக்கல், நீலகிரி, உள்ளிட்ட 20 தொகுதிகளில் நோட்டாவுக்கு 10,000-க்கும் மேல் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

News June 5, 2024

நீங்கள் தான் உண்மையான கேம் சேஞ்சர்

image

ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலில் 21 இடங்களையும், மக்களவை தேர்தலில் 2 இடங்களையும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கைப்பற்றியது. ஆளுங்கட்சியாக இருந்த YSRCP-ஐ பின்னுக்கு தள்ளி எதிர்கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது ஜனசேனா. இதையடுத்து, ‘நீங்கள் தான் உண்மையான கேம் சேஞ்சர். உங்களை கண்டு பெருமையடைகிறேன்’ என பவன் கல்யாணுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் அவரது சகோதரரும், நடிகருமான சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News June 5, 2024

வீணானது பாமகவின் திட்டம்

image

அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருந்தும், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்தும், செளமியா அன்புமணியை மத்திய அமைச்சராக்கும் திட்டத்துடனும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிட்டது. ஆனால் செளமியா உள்பட அக்கட்சியின் 10 வேட்பாளர்களும் தேர்தலில் தோல்வியடைந்தனர். இதனால் செளமியாவை மத்திய அமைச்சராக்கும் பாமகவின் திட்டம் வீணாகிவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது.

News June 5, 2024

அதிமுக மீண்டும் ஒன்றுபடுமா?

image

மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இபிஎஸ் தலைமை மீது அதிமுக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் போர்க்கொடி உயர்த்துவார்கள் என்றும் பேசப்படுகிறது. இந்நிலையில் பிளவுபட்டு இருக்கும் அதிமுக ஒன்றாக வேண்டுமென ஓபிஎஸ் ஆதரவாளரான ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் கோரிக்கை எழுப்பியுள்ளனர். அதிமுக ஒன்றுபடுமா? குழப்பம் நீடிக்குமா? என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்

News June 5, 2024

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி

image

மீண்டும் பதவியேற்கும் வகையில் பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, ராஜினாமா கடிதத்தினை வழங்கினார். இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மீண்டும் பிரதமராக பதவியேற்க அவர் உரிமை கோருவார் எனத் தெரிகிறது.

News June 5, 2024

குடியரசுத் தலைவரை சந்தித்தார் மோடி

image

டெல்லியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். அமைச்சர்களுக்கு முர்முவின் இல்லத்தில் இன்று சிறப்பு விருந்து அளிக்கப்பட்ட நிலையில், மோடி அதில் கலந்து கொண்டார். அப்போது அவர், குடியரசுத்தலைவருடன் ஆலோசனை நடத்தினார். மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்கலாம் என்று கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

News June 5, 2024

கருணாநிதி மறைவுக்குப் பின் தொடர்ந்து வெற்றி

image

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்குப் பின் திமுகவின் தலைமைப் பொறுப்பேற்ற ஸ்டாலின், அதன்பின் நடந்த 5 தேர்தல்களிலும் கட்சியை வெற்றிபெறச் செய்துள்ளார். 2019- மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2021- சட்டமன்றத் தேர்தல், 2022- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சமீபத்தில் முடிந்த மக்களவைத் தேர்தல் என அனைத்திலும் திமுக வெற்றிபெற்றது.

News June 5, 2024

அடுத்த மூன்று நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 3 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 7 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News June 5, 2024

மத்தியில் ஆட்சியமைப்பது யார்? பரபரப்பில் தலைநகரம்

image

மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, ஆட்சியமைக்க முயல்கிறது. அக்கட்சிக்கு ஆதரவு தர, சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் டெல்லி விரைந்துள்ளனர். புதிய அரசு குறித்து, NDA தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மறுபக்கம், INDIA கூட்டணியினரும் மாலை 6 மணிக்கு கூட்டம் நடத்துவதால், அனைவரின் பார்வையும் டெல்லியை நோக்கியுள்ளது.

error: Content is protected !!