News June 18, 2024

பாஜகவின் பி டீம் அதிமுக: செல்வப்பெருந்தகை

image

இடைத்தேர்தலில் பாமக வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக மற்றும் பாமகவின் பி டீம் ஆக அதிமுக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அவர், எத்தகைய முயற்சி எடுத்தாலும், திமுகவின் வெற்றியை தடுக்க முடியாது என்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், திமுக-பாமக இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

News June 18, 2024

3 குற்றவியல் சட்டங்களை நிறுத்த கோரி ஸ்டாலின் கடிதம்

image

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய சட்டம் ஆகிய 3 குற்றவியல் நடைமுறை சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என அமித் ஷாவிற்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சட்டங்கள் அனைத்தும், சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன; சட்டங்கள் ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். சமஸ்கிருதத்தில் சட்டத்தின் பெயர்கள் இருப்பது அரசமைப்பு 348 பிரிவை மீறுவதாகும் என தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

பாஜகவின் விமர்சனத்திற்கு காங்கிரஸ் பதிலடி

image

ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதை வயநாடு மக்களிடம் ராகுல் வெட்கமின்றி மறைத்து விட்டதாக, பாஜக மூத்த தலைவர் ராஜூவ் சந்திரசேகர் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்., மூத்த தலைவர் பவன் கேரா, 2014இல் வாரணாசியில் போட்டியிட போவதை மோடி வதோதரா மக்களிடம் மறைத்ததை போலவா? என வினவியுள்ளார். 2014 தேர்தலில் இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற மோடி, வதோதரா தொகுதியில் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

News June 18, 2024

இறுதிப் போட்டிக்கு இந்திய அணி செல்லும்: ஸ்டீபன்

image

இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆடுகளத்தை விட வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற அவர், இதன் காரணமாக பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இனி வரும் ஆட்டங்களில் பலமான சுழற்பந்து வீச்சாளர்களை வைத்திருக்கிற அணியே வெற்றி பெறும் என்றார்.

News June 18, 2024

இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்

image

தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரையில் சில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென்காசி, மதுரை, விருதுநகர், கரூர், தேனி, திருப்பூர், கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக் கூடும். மழை நேரத்தில் மரத்தடியில் நிற்க வேண்டாம்.

News June 18, 2024

வெப்ப அலைக்கு சூரிய காந்த புயல் காரணமா?

image

வட இந்திய மாநிலங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, ஹரியானா, உ.பி, ஆகிய மாநிலங்களுக்கு வானிலை ஆய்வு மையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, சமீபத்தில் ஏற்பட்ட சூரிய காந்த புயல்தான் கடுமையான வெப்ப அலைக்கு காரணம் என்ற தகவல் பரவியது. இதை மறுத்துள்ள வானிலை ஆய்வு மையம், பருவநிலை மாற்றம்தான் அதிக வெயிலுக்கு காரணம் என விளக்கம் அளித்துள்ளது.

News June 18, 2024

விஜய் சேதுபதியின் பதிலால் ரசிகர்கள் குழப்பம்

image

புஷ்பா-2 படத்தில் நடிக்க மறுக்கவில்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார். மகாராஜா படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் புஷ்பா-2 படத்தில் நடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, நான் நடிக்க மறுக்கவில்லை எனக் கூறிய விஜய் சேதுபதி, எப்போதும் நீங்கள் உண்மையை மட்டுமே பேசக்கூடாது. சில நேரங்களில் பொய் பேசுவது நல்லது என்றார். இதனால், அவர் நடிக்க மறுத்தாரா? இல்லையா? என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

News June 18, 2024

சோமண்ணாவின் பேச்சுக்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு

image

மேகதாது அணை தொடர்பாக மத்திய இணையமைச்சர் சோமண்ணாவின் பேச்சுக்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தை பாலைவனமாக்கும் மேகதாது திட்டத்தை அனுமதிக்க முடியாது என்ற அவர், அனைத்து மாநிலத்துக்கும் பொதுவாக இருக்க வேண்டிய மத்திய அமைச்சர் கர்நாடகாவுக்கு ஆதரவாக இருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, பேச்சுவார்த்தை மூலம் மேகதாது அணை கட்டப்படும் என சோமண்ணா கூறியிருந்தார்.

News June 18, 2024

காவிரி விவகாரத்தில் கைகோர்த்த பாஜக-காங்கிரஸ்

image

மத்திய இணை அமைச்சரின் கருத்துக்கு, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். சில நாள்களுக்கு முன்பு மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் சோமண்ணா, தமிழக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி அணை கட்டப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், இது சாதாரணமாக கூறப்பட்டதாகவும், இதில் தவறில்லை என்றும் டி.கே.எஸ் கூறியுள்ளார்.

News June 18, 2024

இன்று முதல் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு

image

பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகள் வெளியிடும் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதித்து மத்திய தகவல் & ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன், இன்று (ஜூன் 18) முதல் விளம்பரதாரர்கள்/ விளம்பர ஏஜென்சிகள் https://new.broadcastseva.gov.in மற்றும் https://presscouncil.nic.in ஆகிய இணையதளங்களில் தேவையான தகவல்களை சமர்பித்து சுய சான்றிதழ் பெற வேண்டும்.

error: Content is protected !!