News June 7, 2024

நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் அத்தேர்வுக்கு எதிரான தங்களின் கொள்கை, நிலைப்பாடு நியாயமானது என்பதை உறுதிப்படுத்துவதாகக் கூறியுள்ளார். நீட், பிற தேசிய நுழைவுத் தேர்வுகள் ஏழைகளுக்கு எதிரானவை, கூட்டாட்சியியலை சிறுமைப்படுத்துபவை, சமூகநீதிக்கு எதிரானவை, நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

விசிக, நாதகவிற்கு விஜய் வாழ்த்து

image

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் என தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News June 7, 2024

அடுத்த 5 ஆண்டுகளும் மோடியே வழிநடத்துவார்: அமித் ஷா

image

அடுத்த 5 ஆண்டுகளும் பிரதமராக மோடியே நாட்டை வழிநடத்துவார் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி வர வேண்டும் என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் விருப்பம் மட்டுமல்ல 140 கோடி மக்களின் விருப்பமும் அதுதான் என்றார்.

News June 7, 2024

நிஃப்டி மீண்டும் 23,000 புள்ளிகளை கடந்தது

image

ஜூன் 2ஆம் தேதி 23,000 புள்ளிகளை கடந்த இந்திய பங்குச்சந்தை நிஃப்டி, வாக்கு எண்ணும் நாளன்று கடும் சரிவை சந்தித்தது. சுமார் 600 புள்ளிகளுக்கு மேல் நிஃப்டி குறியீட்டு எண் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், மீண்டும் மோடி பிரதமராவது உறுதியானதால் இன்று நிஃப்டி 381 புள்ளிகள் உயர்ந்து 23,202 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.

News June 7, 2024

சந்திரபாபு மனைவிக்கு 5 நாள்களில் ₹579 கோடி வருவாய்

image

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி நர புவனேஸ்வரி, ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் 24.37% பங்குகளை வைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பங்குச் சந்தைகள் உயர்வு அடைந்து வருவதால், அந்நிறுவனத்தின் பங்குகளும் விலை உயர்ந்தன. இதனால் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி கடந்த 5 நாள்களில் 579 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

News June 7, 2024

தமிழக சட்டப்பேரவை 24ஆம் தேதி கூடுகிறது

image

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 24ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் சபாநாயகர் அப்பாவு கூட்டியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 7, 2024

NDA தலைவராகத் தேர்வானார் மோடி

image

NDA கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் கூட்டத்தில், நாடாளுமன்றக் குழுத் தலைவராக (காபந்து பிரதமர்) மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எம்.பி.,க்கள் கூட்டத்தில், நாடாளுமன்றக் குழுத் தலைவராக மோடியை தேர்வு செய்ய வேண்டுமென அமித்ஷா முன்மொழிந்தார். இதனை ராஜ்நாத் சிங், நட்டா வழிமொழித்தனர். இதனைத் தொடர்ந்து 293 எம்.பி.,க்களும் ஒரு மனதாக மோடியை மீண்டும் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

News June 7, 2024

NDA கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டு தலைவர்கள்

image

பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளின் தலைவர்கள் & எம்.பி.,க்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டில் இருந்து சென்ற TTV தினகரன், ஓபிஎஸ், ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், அன்புமணி, ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழக பாஜக சார்பில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

News June 7, 2024

பிரதமர் பதவியேற்கும் தேதி அறிவிப்பு

image

நரேந்திர மோடி வரும் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ளார். இத்தகவலை பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க சுமார் 8000 பேருக்கு NDA கூட்டணி அழைப்பு விடுத்திருக்கிறது.

News June 7, 2024

பாமகவின் மாம்பழச் சின்னம் பறிபோகிறதா?

image

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியில் கூட வெல்லாத பாமக, 6 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. அத்துடன் தேர்தலில் 4.33 சதவீத வாக்குகளை மட்டுமே பாமக பெற்றது. இதனால் அக்கட்சியிடம் இருக்கும் மாம்பழ சின்னம் பறி போகும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு, தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் மூத்த தலைவர் பதிலளிக்காமல் நழுவினார்.

error: Content is protected !!