Tirunelveli

News October 7, 2024

அறிவியல் மையத்தில் நாடக போட்டி

image

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நாளை மாணவர்களுக்கு நாடகப் போட்டி விழா நடைபெறுகிறது. அறிவியல் தொடர்பான தலைப்பில் நடைபெறும் இந்த போட்டியில் மாவட்டங்களில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநிலப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவதற்காக பங்கேற்பர். இதில் அகில இந்திய மண்டல போட்டிக்கு 2 அணிகள் தேர்வு செய்யப்படும்.

News October 7, 2024

ஆளுநர் வருகையை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு

image

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று(அக்.,7) நெல்லை மாவட்டம் தருவை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தை பார்வையிடுகிறார். இதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து சுமார் 384 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் சாலை மார்க்கமாக தூத்துக்குடி விமான நிலையம் செல்கிறார்.

News October 7, 2024

நவராத்திரி முன்னிட்டு சிறப்பு ரயில்கள்

image

நவராத்திரி கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில் வரும் 11ம் தேதி ஆயுதபூஜையும் மறுதினம் விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு தசரா திருவிழாக்காண பக்தர்கள் திரண்டு வருவர். இதையொட்டி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும் நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக நேற்று(அக்.06) தெரிவித்துள்ளது.

News October 7, 2024

போதைப்பொருளை அடியோடு ஒழிக்க நடவடிக்கை: நெல்லை SP

image

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் குமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் டி.ஐ.ஜி மூர்த்தி தலைமையில் நெல்லையில் நடந்தது. நெல்லை எஸ்பி சிலம்பரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேசிய அவர், போதைப்பொருள் எந்த வடிவில் வந்தாலும் அதை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

News October 7, 2024

மனைவியுடன் பேசியதால் தீர்த்து கட்டினேன்: பரபரப்பு வாக்குமூலம்

image

நெல்லை, மானூர் அழகிய பாண்டியபுரத்தில் கிரேன் ஆபரேட்டர் அகிலேஸ்வரன் என்பவர் 4 பேர் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் அசோக் ரத்தினராஜ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அசோக் ரத்திராஜ் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், தனது மனைவியுடன் அகிலேஸ்வரன் அடிக்கடி பேசி பழகி வந்ததை நான் சத்தம் போட்டேன். அவர் கேட்கவில்லை. அதனால் தீர்த்து கட்டினேன் எனக் கூறியுள்ளார்.

News October 7, 2024

பொதுச்செயலாளரிடம் வாழ்த்து பெற்ற புதிய பொறுப்பாளர்

image

திருநெல்வேலி மாநகர மாவட்ட தேமுதிக பொறுப்பாளராக ஜெயச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை தொடர்ந்து ஜெயச்சந்திரனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவர் இன்று சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் ஆனந்த மணி, முரசு மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News October 6, 2024

நெல்லை வந்த மாநில தலைவருக்கு வரவேற்பு

image

நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வருகை தந்தார். அவருக்கு நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, செயலாளர் அன்வர்ஷா,நெல்லை தொகுதி தலைவர் தாழை சேக் இஸ்மாயில், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் தாழை உசேன் உள்ளிட்ட கட்சியினர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

News October 6, 2024

தேமுதிக நிர்வாகிகளுக்கு அவசர அழைப்பு விடுத்த மன்ற செயலாளர்

image

நெல்லை மாவட்ட ஆட்சியரை நாளை (அக்.7) பிரபல நடிகரும் தேமுதிக தலைமை செய்தி தொடர்பாளருமான ராஜேந்திரநாத் சந்தித்து மனு அளிக்க உள்ளார். இதில் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு, தென்காசி தெற்கு மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் சுடலைமுத்து தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

வீடுகள் விரிசல் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வரும் பிரபல நடிகர்

image

நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி அருகில் உள்ள ஓடைக்கரை துலுக்கப்பட்டி கிராமத்தில் கல் குவாரியில் வைக்கப்படும் வெடியால் வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த வீடுகளை தேமுதிக நிர்வாகிகள் கண்டறிந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கையெழுத்தை வாங்கி உள்ளனர். இந்த கையெழுத்துடன் உள்ள மனுவை நாளை (அக்.7) காலை 10 மணியளவில் நெல்லை மாவட்ட ஆட்சியரை நடிகர் ராஜேந்திரநாத் சந்தித்து மனு அளிக்க உள்ளார்.

News October 6, 2024

அரசு ஊழியர்களுக்கான குறைதீர் கூட்டம்

image

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (அக்.7) மதியம் 3 மணிக்கு அரசு துறையில் பணிபுரியும் அனைத்து துறை பணியாளர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் பதவி உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகள் இருந்தால் அரசுத்துறை ஊழியர்கள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!