Madurai

News July 18, 2024

மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி விதிமீறல் கட்டடங்கள்

image

மதுரை இந்து மக்கள் கட்சி இன்று(ஜூலை 17) வெளியிட்ட அறிக்கையில், மீனாட்சியம்மன் கோயிலின் பாதுகாப்பு கருதி ஒரு கிமீ தொலைவுக்கு 30 அடி உயரத்துக்குள் மட்டுமே கட்டடம் கட்ட வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால் விதிமுறையை மீறி, வளையல்கார சந்து அருகே இரு கட்டடங்களும், மேற்கு கோபுரம் எதிரே விடுதிக் கட்டடமும் அதிக உயரத்துக்கு கட்டப்பட்டு வருகின்றன. இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

News July 18, 2024

அரிட்டாபட்டியில் 9 ஆண்டுகளுக்கு பிறகு களரி விழா

image

மேலூர் அருகே அரிட்டாபட்டி அதியன் குலத்தார்களின் குல தெய்வங்களின் களரி விழா, 9 ஆண்டுக்கு பிறகு நடைபெற்றது. நேற்று கட்டக்குடுமி அய்யனாருக்கு புரவி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து இன்று மறவன்பதி சாமிக்கு நாக பானை பொங்கல் வைத்து, சாமிக்கு கருங்கிடா, செங்கிடா பலியிடப்பட்டது. மேலும் 50 நேர்த்தி கடன் கிடாய்கள், 200 கோழிகள் பலியிட்டு காட்டு களரி சாமியாட்டம் நடைபெற்றது.

News July 18, 2024

முதல்வருக்கு எம்பி வலியுறுத்தல்

image

மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் குற்றப்பரம்பரை கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடி உயிர் தியாகம் செய்த மாயக்காள் அம்மையார் உள்பட 17 பேருக்கு மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா அருகில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் இது குறித்து பரிந்துரைக்க வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

News July 17, 2024

மதுரையில் ‘ஸ்பா’ பெயரில் பாலியல் தொழில்

image

மதுரை பைபாஸ் ரோட்டில் ‘சீ சோர் ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு புகார் வந்தது. போலீசார் சோதனை செய்ததில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. அங்கிருந்த 4 வடமாநில பெண்கள் மீட்கப்பட்ட நிலையில் ஸ்பா மேலாளர்களான வில்லாபுரம் விஷ்ணு பிரியா(30), பிரகாஷ்(26) கைது செய்யப்பட்டனர். ஸ்பாவை நடத்தி வந்த கேட்டரிங் கல்லூரி நிர்வாகி ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

News July 17, 2024

விலை உயர்ந்த மதுரை மல்லிகை

image

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஆடி மாத பிறப்பையொட்டி ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ரூ.400க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகைப் பூ இன்று ஒரே நாளில் 200 ரூபாய் விலை உயர்ந்து ரூ.600க்கு விற்பனையாகி வருகிறது. பிச்சிப் பூ ரூ.500, முல்லைப் பூ ரூ.300, செவ்வந்தி ரூ.120, ரோஜா ரூ.120, அரளி ரூ.150, சம்பங்கி ரூ.100க்கும் விற்பனையாகிறது.

News July 17, 2024

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ்

image

மதுரையில் மாநகராட்சி மத்திய மண்டல தூய்மை பணியாளர்களை சுகாதார ஆய்வாளர் தரக்குறைவாக பேசுவதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் 3 நாட்களாக நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் தவறு செய்தது உறுதியானால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உறுதி அளித்ததை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.

News July 17, 2024

சவாரி ஏற்றுவதில் தகராறு: ஆட்டோ ஓட்டுநர் கொலை

image

சிக்கந்தர்சாவடியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளை ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுநரான ஜோதிபாசுக்கும், மற்றொரு ஆட்டோ ஓட்டுநருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர், ஜோதிபாசுவை வெட்டி படுகொலை செய்தார். படுகாயமடைந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 17, 2024

இறைச்சி கடைகளில் குவிந்த பொதுமக்கள்

image

மதுரையில் ஆடி முதல் நாளை முன்னிட்டு ஒவ்வொரு வீடுகளிலும் உள்ள புதுமண தம்பதிகளுக்கு விருந்து வழங்கப்படும். அதன்படி இன்று ஆடி முதல் நாளை முன்னிட்டு, மதுரை மாநகரில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளிலும் ஏராளமான பொதுமக்கள் இறைச்சிகளை வாங்கி சென்றனர். மதுரை மாநகர் பகுதியில் மட்டன் கிலோ ரூ.760க்கும், சிக்கன் கிலோ ரூ.200க்கும் விற்பனையான நிலையில், காலை முதலே இறைச்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

News July 17, 2024

ஜூலை 19: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், வரும் ஜூலை 19ஆம் தேதி காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், விவசாயம் தொடர்பான அனைத்து அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர். எனவே, இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!