India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் 5,000 ஏக்கா் நிலப் பரப்புக்குத் தேவையான 100 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை, 50% மானியத்தில் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு மதுரை மாவட்டம் தல்லாகுளம் பகுதியில் செயல்படும் வேளாண் துணை இணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா, ஜூலை 20ஆம் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள உள் அரங்கில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் M.M.சுந்தரேஷ், விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சூர்யகாந்த், B.R.கவாய் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
சென்னையில், தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர்களுக்கான மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற மதுரை மாணவி ரோஷினி, பட்டர்பிளை, பிரிஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் 3 தங்கம், 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் வென்றார். இதன் மூலம், அடுத்த மாதம் ஒடிசா மாநிலத்தில் நடக்க உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில், பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
மதுரை தென் மண்டல காவல்துறை தலைவராக இருந்த கண்ணன் கடந்த வாரம் பணி மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிரேம் ஆனந்த் சின்கா தென்மண்டல காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் மதுரை ஐஜி அலுவலகத்தில் பிரேம் ஆனந்த் சின்கா புதிய மண்டல காவல்துறை தலைவராக(ஜூலை 17) பதவி ஏற்றுக்கொண்டார். இவர் ஏற்கனவே கடந்த 2022ஆம் ஆண்டு காலகட்டத்தில் மதுரை மாநகர காவல் ஆணையராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
மதுரை இந்து மக்கள் கட்சி இன்று(ஜூலை 17) வெளியிட்ட அறிக்கையில், மீனாட்சியம்மன் கோயிலின் பாதுகாப்பு கருதி ஒரு கிமீ தொலைவுக்கு 30 அடி உயரத்துக்குள் மட்டுமே கட்டடம் கட்ட வேண்டும் என அரசாணை உள்ளது. ஆனால் விதிமுறையை மீறி, வளையல்கார சந்து அருகே இரு கட்டடங்களும், மேற்கு கோபுரம் எதிரே விடுதிக் கட்டடமும் அதிக உயரத்துக்கு கட்டப்பட்டு வருகின்றன. இதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலூர் அருகே அரிட்டாபட்டி அதியன் குலத்தார்களின் குல தெய்வங்களின் களரி விழா, 9 ஆண்டுக்கு பிறகு நடைபெற்றது. நேற்று கட்டக்குடுமி அய்யனாருக்கு புரவி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து இன்று மறவன்பதி சாமிக்கு நாக பானை பொங்கல் வைத்து, சாமிக்கு கருங்கிடா, செங்கிடா பலியிடப்பட்டது. மேலும் 50 நேர்த்தி கடன் கிடாய்கள், 200 கோழிகள் பலியிட்டு காட்டு களரி சாமியாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் குற்றப்பரம்பரை கைரேகை சட்டத்தை எதிர்த்து போராடி உயிர் தியாகம் செய்த மாயக்காள் அம்மையார் உள்பட 17 பேருக்கு மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா அருகில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் இது குறித்து பரிந்துரைக்க வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை பைபாஸ் ரோட்டில் ‘சீ சோர் ஸ்பா’ என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு புகார் வந்தது. போலீசார் சோதனை செய்ததில் பாலியல் தொழில் நடப்பது உறுதியானது. அங்கிருந்த 4 வடமாநில பெண்கள் மீட்கப்பட்ட நிலையில் ஸ்பா மேலாளர்களான வில்லாபுரம் விஷ்ணு பிரியா(30), பிரகாஷ்(26) கைது செய்யப்பட்டனர். ஸ்பாவை நடத்தி வந்த கேட்டரிங் கல்லூரி நிர்வாகி ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஆடி மாத பிறப்பையொட்டி ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக ரூ.400க்கு விற்கப்பட்டு வந்த மல்லிகைப் பூ இன்று ஒரே நாளில் 200 ரூபாய் விலை உயர்ந்து ரூ.600க்கு விற்பனையாகி வருகிறது. பிச்சிப் பூ ரூ.500, முல்லைப் பூ ரூ.300, செவ்வந்தி ரூ.120, ரோஜா ரூ.120, அரளி ரூ.150, சம்பங்கி ரூ.100க்கும் விற்பனையாகிறது.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 30க்கும் மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலைநாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் பங்கேற்கலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.