News March 5, 2025

மாதந்தோறும் மின் கணக்கீடு: விரைவில் வருகிறது மாற்றம்

image

தேர்தல் வாக்குறுதிப்படி, மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாதந்தோறும் மின் கணக்கீடு செய்வதற்கான ஸ்மார்ட் மீட்டர்கள் டெண்டர் விட உள்ளதாகக் கூறினார். மீட்டர்கள் பொருத்தப்படுவதற்கு ஏற்ப, உடனுக்குடன் மாதாந்திர முறையில் மின் கணக்கீடு திட்டம் அமலுக்கு வரும் என்று உறுதியளித்தார்.

News March 5, 2025

கும்பமேளா நீர் டோர் டெலிவரி!

image

பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடந்த கும்பமேளா தான் நாடு முழுவதும் பேச்சாக இருந்தது. கும்பமேளாவில் பங்கேற்க முடியாமல் தவித்த மக்களுக்காக அமிர்த ஜலம் என்ற பெயரில் டோர் டெலிவரி செய்ய முன் வந்திருக்கிறது உ.பி.அரசு. இதற்காக, 31,000 லிட்டர் திரிவேணி நீரை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லப்படவுள்ளது. முதற்கட்டமாக நொய்டாவுக்கு 10,000 லிட்டர் நீர் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

News March 5, 2025

18 பேர் பலி எதிரொலி: 5 அதிகாரிகள் பணியிட மாற்றம்

image

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த சம்பவத்தில், 5 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து ரயில்வே உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்.15ஆம் தேதி கும்பமேளா செல்ல டெல்லி ரயில் நிலையத்தில் கட்டுக்கடங்காத அளவிற்கு பயணிகள் குவிந்ததால், இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்ற நிலையில், கோட்ட ரயில்வே மேலாளர் உள்ளிட்ட 5 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News March 5, 2025

தமிழ்நாட்டிற்கு அழிக்க முடியாத அநீதி:CM ஸ்டாலின்

image

தமிழ்நாடு மிகப் பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என CM ஸ்டாலின் கருத்து தெரிவித்திருக்கிறார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய அவர், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட தொகுதிகளே தொடர வேண்டும் என்றார். தமிழகம் 8 தொகுதிகளை இழக்க வாய்ப்பு இருக்கிறது. எம்.பிக்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் தமிழகத்திற்கு அது அழிக்க முடியாத அநீதியாகிவிடும் எனத் தெரிவித்தார்.

News March 5, 2025

கொஞ்சம் சுதந்திரம் கொடுங்க Bro: விஜய்

image

தொகுதி மறுவரையறை தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், குழந்தைகள் பெரியவர்களாக வளரும் வரையே பெற்றோரின் கட்டுப்பாடுகள் தேவை என குறிப்பிட்டுள்ளார். வளர்ந்துவிட்டால், சுதந்திரம் கொடுத்தால்தான் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். அது போல், மாநிலங்களுக்கு சுயாட்சியும், நிதிப் பகிர்வும் வழங்குவதே இந்தியா என்ற கூட்டுக்குடும்பத்தை ஒற்றுமையாக வைத்திருக்கும் என கூறியுள்ளார்.

News March 5, 2025

பத்ம ஸ்ரீ விருதாளர் கோதாவரி சிங் காலமானார்

image

பிரபல கைவினைக் கலைஞர் பத்ம ஸ்ரீ கோதாவரி சிங் (84) உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளில் இவரது கைவண்ணத்தில் உருவான பொம்மைகள் பல முறை இடம்பெற்றுள்ளன. காசியில் வசித்து வந்த இவரைப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு முறை நேரில் சந்தித்துள்ளார். கோதாவரி சிங் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News March 5, 2025

திரைக்கதை மேஜிசியன் செல்வராகவனின் பர்த்டே இன்று

image

செல்வராகவனின் 47வது பிறந்தநாள் இன்று. ‘காதல் கொண்டேன்’ மூலம் காதல் ரசனையை ரசிகர்களுக்கு ஊட்டத் தொடங்கியவர், ‘7ஜி ரெயின்போ காலனி’யின் மூலம் ரசிகர்களின் மனதில் வீடு கட்டி ஆயிரத்தில் ஒருவனாக குடியேறிவிட்டார். ‘மயக்கம் என்ன’, ‘நானே வருவேன்’ என இவரின் படங்களை ‘நெஞ்சம் மறப்பதில்லை’யே! அவர் நடிகரானாலும் இயக்குநர் செல்வாவை ரசிகர்கள் மிஸ் பண்ண தான் செய்கிறார்கள். உங்களுக்கு பிடித்த அவரின் படம் எது?

News March 5, 2025

பெண் கவுன்சிலர்களுக்கு பதில் கணவருக்கு பதவிப்பிரமாணம்

image

சட்டீஸ்கரில் பெண் கவுன்சிலர்களுக்கு பதில், அவர்களது கணவன்மார்கள் பதவிப்பிரமாணம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபீர்தாம் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் 11 வார்டுகளில் 6 பெண்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற பெண்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

News March 5, 2025

ஏறுமுகத்தில் தொடங்கிய பங்குச் சந்தைகள்!

image

2025 தொடங்கியதில் இருந்தே பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். ஆனால், இன்று பங்குச் சந்தைகள் சிறிய ஏற்றம் கண்டுள்ளன. காலை நிலவரப்படி, சென்செக்ஸ் 510 புள்ளிகள் உயர்ந்து 73, 509 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. நிஃப்டி 168 புள்ளிகள் அதிகரித்து 22,244 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

News March 5, 2025

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்.. சவரனுக்கு ₹440 அதிகரிப்பு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 5) சவரனுக்கு ₹440 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,065க்கும், சவரன் ₹64,520க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹560 அதிகரித்திருந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக உயர்வைக் கண்டுள்ளது. அதேநேரம், வெள்ளி விலையில் மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹107க்கும், பார் வெள்ளி கிலோ ₹1,07,000க்கும் விற்பனையாகிறது.

error: Content is protected !!