News April 20, 2024

தேர்தல் விதிகளை தளர்த்த வேண்டும்

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் நடைமுறை விதிகளைத் தளர்த்த வேண்டும் என திமுக எம்பி வில்சன் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் முடிந்த நிலையிலும், மக்கள் ரூ.50,000க்கு மேல் எடுத்துச் செல்ல தடை தொடர்வது நியாயமற்றதாகும் எனக் கூறிய அவர், மக்கள் நலப் பணிகள் உள்ளிட்டவற்றை தடையின்றி செயல்படுத்த விதிகளை தளர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

News April 20, 2024

20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்

image

கர்நாடகாவில் 20 இடங்களில் வெற்றி பெறுவோம் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் தனித்து களமிறங்கியுள்ள நிலையில், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மொத்தமுள்ள 28 இடங்களில் 25 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதுகிறது.

News April 20, 2024

2019 தேர்தலை விட 3.01% குறைந்த வாக்குப்பதிவு

image

தமிழகத்தில் 69.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 72.47% வாக்குகள் பதிவான நிலையில், அந்தத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தற்போது வாக்குப்பதிவு 3.01% குறைந்துள்ளது. வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், இறுதியாக வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News April 20, 2024

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கணக்கெடுக்கும் பணி

image

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு சதவீதத்தை கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார். தொகுதி வாரியாக வாக்குப் பதிவு சதவீதத்தை தேர்தல் அலுவலர்கள் இறுதி செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், 39 தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப் பதிவு நடந்துள்ளதால் மறு வாக்குப் பதிவு நடைபெறாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

ராமரை தரிசித்த ஜெனிலியா

image

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜெனிலியா. சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் எனப் பல தமிழ் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த இவர், 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவர் தனது கணவர் மற்றும் மகன் உடன் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

News April 20, 2024

பாஜக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

image

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் குன்வார் சர்வேஷ் குமார் மாரடைப்பால் காலமானார். முதல்கட்ட மக்களவைத் தேர்தலில், மொரதாபாத் தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. அங்கு பாஜக சார்பில் சர்வேஷ் போட்டியிட்டார். இன்று திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறியது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

News April 20, 2024

10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன்

image

வதோதரா தொகுதியில் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என பாஜக இளம் வேட்பாளர் ஹேமங் கூறியுள்ளார். வதோதரா மக்களவை தொகுதிக்கான எம்.பி.யாக ரஞ்சன் பட் பதவி வகித்த நிலையில், மீண்டும் தேர்தலில் போட்டியிட அவருக்கு பாஜக வாய்ப்பளித்தது. எனினும், அவர் போட்டியிட மறுத்ததால் 33 வயதான ஹேமங் என்பவருக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது. இந்த தொகுதியில் ஏற்கெனவே மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

News April 20, 2024

ஹெச்டிஎஃப்சி வங்கியின் நிகர லாபம் அதிகரிப்பு

image

கடந்த நிதியாண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை ஹெச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் நிகர லாபம் 0.84% அதிகரித்து ரூ.16,511 கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் நிகர லாபம் ரூ.16,373 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருவாயைப் பொறுத்தமட்டில், ரூ.28,470 கோடியிலிருந்து ரூ.29,007 கோடியாக உயர்ந்துள்ளது. மோசமான கடன்கள் 1.26%இல் இருந்து 1.24%ஆக குறைந்துள்ளது.

News April 20, 2024

266 ரன்கள் குவித்த ஹைதராபாத்

image

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 266 ரன்கள் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 89, அபிஷேக் ஷர்மா 46, ஷாபாஸ் 59* ரன்கள் எடுத்தனர்.DC சார்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து DC அணிக்கு 267 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக SRH 250+ ரன்கள் எடுத்துள்ளது.

News April 20, 2024

தமிழ்நாடு மகிளா காங்கிரசிற்கு புதிய தலைவர்

image

தமிழ்நாடு மகிளா காங்., தலைவராக இருந்த சுதா ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு ஹசீனா சையத் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்திற்கு கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாக காங்., பொதுச்செயலாளர் KC வேணுகோபால் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பாக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். தற்போது தேர்தல் முடிந்த மறுநாளே மகிளா காங்கிரசுக்கும் தலைவர் மாற்றப்பட்டுள்ளார்.

error: Content is protected !!