News May 21, 2024

ராகுலைப் புகழ்ந்த செல்லூர் ராஜூ

image

ராகுல் சமீபத்தில் ஓட்டல் ஒன்றில் மக்களுடன் மக்களாக அமர்ந்து சாப்பிடும் வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது X பக்கத்தில் பதிவிட்டு, “நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்” என ராகுல் காந்தியைப் புகழ்ந்துள்ளார். பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை என அதிமுக கூறி வந்த நிலையில், ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என அதிமுக மறைமுகமாக தூது விடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

News May 21, 2024

வேலையின்மையால் திண்டாடும் இளைஞர்கள்: ஆய்வு

image

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 11.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொருளாதார நிபுணர் ட்ரின் நுயென் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தாலும், அனைத்து மக்களுக்கும் வேலைகளை உருவாக்கும் வேகம் போதவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலையின்மை முன்னெப்போதும் இல்லாத அளவில் சவாலாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

News May 21, 2024

யூடியூபர் இர்ஃபான் மீது பாய்கிறது நடவடிக்கை

image

பிரபல யூடியூபர் இர்ஃபான் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவருடைய மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், துபாயில் மருத்துவப் பரிசோதனை செய்த அவர், சிசுவின் பாலினத்தை யூடியூப் சேனலில் அறிவித்தார். வெளிநாட்டில் பரிசோதனை செய்திருந்தாலும் சிசுவின் பாலினத்தை பகிரங்கமாக அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

News May 21, 2024

3 ஆண்டுகளில் 50 லட்சம் மரங்களை காணவில்லை

image

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் விளை நிலங்களில் இருந்து அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, தெலங்கானா, மகாராஷ்டிராவில் அதிகப்படியான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. மொத்த நிலப்பரப்பில் காடுகள் 20%, விளை நிலங்கள் 56%ஆக இருக்கும் நிலையில், 2010 & 11ஆம் ஆண்டில் எடுத்த செயற்கைகோள் படங்களுடன் ஒப்பிட்டால் 11% மரங்கள் அழிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

News May 21, 2024

பாஜக தலைவர்களை கொல்லத் திட்டம்

image

குஜராத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த 4 ஐஎஸ் தீவிரவாதிகளை அகமதாபாத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில், குஜராத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தவும், பாஜக, RSS தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. இலங்கையை சேர்ந்த 4 தீவிரவாதிகளும் தமிழ் மட்டுமே பேசியுள்ளனர். வேறுமொழி அவர்களுக்கு தெரியவில்லை. இதனால், தமிழ் தெரிந்த அதிகாரி உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.

News May 21, 2024

அனுமதியின்றி அணை கட்டுவதை நிறுத்த உத்தரவு

image

இடுக்கி மாவட்டம் பெருகுடா என்ற இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணையை கேரள அரசு கட்டுகிறது. கடந்த மூன்று நாள்களாக இந்த விவகாரம் தமிழ்நாட்டில் விவாதப்பொருளாக மாறியுள்ள நிலையில், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என கேரள அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அனுமதி பெறவில்லை என்றால், அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

News May 21, 2024

புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

image

பழுதடைந்த பேருந்துகளை உடனடியாக பழுதுபார்க்க வேண்டுமென தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பேருந்துகளில் மக்கள் அச்சமில்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டாமல் கடனாக வாங்கிய ₹3.5 லட்சம் கோடியில் புதிய பேருந்துகளை உடனடியாக வாங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

News May 21, 2024

தயிர் சாதம் ₹300, காபி ₹200

image

ஒரு காபி விலை ₹190 என்று அச்சிடப்பட்ட மெனு கார்டு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இயங்கும் அடையார் ஆனந்த பவன் ஹோட்டலின் மெனு கார்டுதான் இது. விமான நிலையத்திற்குள் இடத்திற்கான வாடகை அதிகம் என்பதால் உணவகங்கள் அதிக விலையை நிர்ணயிப்பது வழக்கம்தான். ஆனால், தயிர்சாதம் ₹290, இட்லி ₹270, சப்பாத்தி ₹350, பொங்கல் ₹290 என்ற விலை காண்போரை மலைக்க வைக்கிறது.

News May 21, 2024

கனமழைக்கு 5 நாள்களில் 11 பேர் மரணம்

image

தமிழ்நாட்டில் தொடர் கனமழைக்கு கடந்த 5 நாள்களில் (மே 16 -20) 11 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. கோவை, நெல்லை, நீலகிரி, குமரியில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 10 குழுக்கள் உள்ளதாகவும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

News May 21, 2024

விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தந்தை கைது

image

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், சொகுசு காரை மது போதையில் சுமார் 150 கி.மீ. வேகத்தில் ஓட்டி, இருவரது உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவன் 15 மணி நேரத்தில் ஜாமின் பெற்றது சர்ச்சையானது. இந்நிலையில், அச்சிறுவனின் தந்தையை போலீசார் அவுரங்காபாத்தில் கைது செய்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானக் கடையின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!