News April 24, 2024

கேசிஆர் மகள் ஜாமின் மனு மீது மே 2இல் உத்தரவு

image

சந்திரசேகர் ராவின் மகள் கவிதா ஜாமின்கோரித் தாக்கல் செய்த மனு மீது மே 2ஆம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. மதுபானக் கொள்கை மாற்ற முறைகேடு வழக்கில் அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து சிபிஐ அமைப்பும் வழக்குப்பதிந்து கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமின்கோரிக் கவிதா தாக்கல் செய்த மனு மீது மே 2இல் உத்தரவு பிறப்பிக்கப்படுமென டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அறிவித்துள்ளது.

News April 24, 2024

நீயா பட இயக்குநர் காலமானார்

image

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பிரபல இயக்குநர் துரை இன்று உடல்நலக்குறைவால் காலமானார். கமலின் நீயா, ரஜினியின் ஆயிரம் ஜென்மங்கள், சிவாஜியின் துணை உள்பட நாற்பதுக்கு மேற்பட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர். அவளும் பெண்தானே, பசி படங்களுக்காக இரண்டு தேசிய விருதுகள், தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநர் விருது மற்றும் கலைமாமணி விருதுகளை வென்றவர். அவரின் மறைவிற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News April 24, 2024

பாதி கலக்கம், பாதி நம்பிக்கை (3)

image

தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகள் பலமுறை பொய்யாகி உள்ளன. அதுபோல் இந்த முறையும் பொய்யாக வாய்ப்பு உள்ளதென்று திமுக தலைவர்களில் சிலர் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. அதுபோல் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அளிக்கப்பட்ட அழுத்தங்களைச் சமாளித்தது போல, பாஜக அழுத்தம் தரும்பட்சத்தில் அதையும் சமாளிக்கலாம் என்று தலைவர்கள் சிலர் நினைப்பதாகவும் கூறப்படுகிறது.

News April 24, 2024

பாதி கலக்கம், பாதி நம்பிக்கை (2)

image

பிரசாரத்தின்போது திமுக இனி இருக்காது எனப் பிரதமர் மோடி காட்டமாகப் பேசியிருந்தார். அண்ணாமலையும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகக் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதை வைத்து பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால், தங்களுக்குக் குடைச்சல் கொடுக்கும் என்றும், கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் கைதானது போலத் தங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமோ என்றும் திமுக கலக்கத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

News April 24, 2024

பாதி கலக்கம், பாதி நம்பிக்கை (1)

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து 3 நாள்களான நிலையில், திமுக அலுவலகங்களில் பேரமைதி நிலவுகிறது. பாஜக மீண்டும் 3ஆவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்கும் எனப் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அதுபோல், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 2ஜி வழக்கு உள்ளிட்ட முறைகேடு வழக்குகளின் விசாரணையை முடுக்கி விடக்கூடும் என திமுக கருதுகிறது.

News April 24, 2024

தமிழ்நாட்டிற்குள் இனி பணம் கொண்டு செல்லலாம்

image

தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில், பறக்கும் படை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்குள் ரூ.50,000க்கும் மேல் கொண்டு செல்வதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அண்டை மாநில எல்லை மாவட்டங்களில் பறக்கும் படையினர் சோதனை தொடரும் எனக் கூறிய அவர், வாக்காளர் பெயர் விடுபட்டது தொடர்பாக ஒவ்வொன்றாக விசாரணை நடத்தப்படும் என விளக்கமளித்தார்.

News April 24, 2024

இஸ்ரேல் ராணுவ உளவுப்பிரிவுத் தலைவர் ராஜினாமா

image

ஹமாஸ் அமைப்பின் ராக்கெட் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று, இஸ்ரேல் ராணுவ உளவுப்பிரிவுத் தலைவர் அஹரான் ஹலிவா ராஜினாமா செய்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நூற்றுக்கணக்கில் ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 1,200 பேர் பலியாகினர். மேலும் 250 பேரைச் சிறைபிடித்துச் சென்றனர். இதை முன்கூட்டித் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று ஹலிவா பதவி விலகியுள்ளார்.

News April 24, 2024

கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடு

image

வரும் கல்வியாண்டு முதல் கல்வி உரிமைச் சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஒரு கி.மீ. தொலைவுக்குள் அரசுப் பள்ளி இருப்பின் அதேபகுதியில் தனியார் பள்ளிக்கு RTE இடஒதுக்கீடு வழங்கப்படாது எனக் கூறப்படுகிறது. RTEக்கு அதிகத் தொகை செலவழிப்பதைக் கட்டுப்படுத்தவும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் இந்நடவடிக்கையை எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.

News April 24, 2024

காங்கிரஸின் முயற்சி கைகூடுமா?

image

I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளின் சார்பில் தேசிய அளவில் பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்ட காங்கிரஸின் தேர்தல் அறிக்கை (திரிணாமுல் காங்கிரஸ் போன்ற) சில கூட்டணிக் கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து, அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அறிக்கை வெளியிட காங்கிரஸ் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

News April 24, 2024

குகேஷின் சாதனையால் இந்தியாவுக்கு பெருமை

image

FIDE கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி எக்ஸ் பதிவில், குகேஷின் சாதனையால் இந்தியாவே பெருமை கொள்வதாக பாராட்டியுள்ளார். இச்சாதனை அவரது அபாரத் திறமையையும், அர்ப்பணிப்பையும் உணர்த்துவதாகக் கூறினார். மேலும், அவரின் செயல்பாடு கோடிக்கணக்கானவர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாகவும் வாழ்த்து தெரிவித்தார்.

error: Content is protected !!