News April 25, 2024

தடுமாறும் ஹைதராபாத் அணி

image

RCB அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் SRH அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. கடந்த சில போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய SRH அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் இன்று சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தற்போது வரை SRH 12 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. SRH வெற்றிபெற இன்னும் 48 பந்துகளில் 88 ரன்கள் தேவை. RCB சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது.

News April 25, 2024

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு

image

புதுக்கோட்டை சங்கன் விடுதியில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மக்கள் அளித்த புகாரையடுத்து அங்குச் சென்ற அதிகாரிகள், குடிநீர் மாதிரியை சோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக வேங்கைவயலில், குடிநீர்த் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்த நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியது மக்களை வேதனையடையச் செய்துள்ளது.

News April 25, 2024

ஊட்டச்சத்து பானங்களால் என்ன பிரச்னை?

image

போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ் போன்ற பானங்களை ‘ஆரோக்கிய பானங்கள்’ பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவை ஆரோக்கிய பானங்களே இல்லை என்பதுதான் அதற்குக் காரணம். இப்படியான பானங்களில் சேர்க்கப்படும் அதிகப்படியான சர்க்கரை நமது ரத்தத்தில் சட்டெனக் கலப்பதால் புத்துணர்ச்சி ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால், நாளடைவில் இவை சர்க்கரை வியாதி, உடல் பருமன் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

News April 25, 2024

100 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி

image

நடப்பு ஐபிஎல் தொடரில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது SRH. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா, க்ளாஸன் இருவரும் தலா 26 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். டிராவிஸ் ஹெட் 18 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்த சீசனில் SRH அணிக்கு இன்னும் 6 போட்டிகள் உள்ளதால், 200 சிக்ஸர்கள் அடிக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு SRH அதிகபட்சமாக 2022 சீசனில் 97 சிக்ஸர்கள் அடித்திருந்தது.

News April 25, 2024

செயற்கை இனிப்பூட்டிகளில் இருக்கும் அபாயம்

image

அஸ்பார்டேம், சுக்ரலோஸ் மற்றும் சாக்கரின் போன்ற செயற்கை இனிப்பூட்டி கலந்த உணவுகளைச் சாப்பிட வேண்டாம் என உலகச் சுகாதார அமைப்பு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இவை டைப் 2 நீரிழிவு, இதய நோய், உடல் பருமன் ஆகிய அபாயத்தை அதிகரிக்கின்றன. உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. அண்மையில் பஞ்சாபில் அதிக அளவில் செயற்கை இனிப்பூட்டி சேர்க்கப்பட்ட கேக்கைத் தின்ற சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

VVPAT வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

image

VVPAT எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100% எண்ணக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. வாக்குப் பதிவு எந்திரத்தில் நிகழ்த்தப்படும் மோசடியைத் தவிர்க்க VVPAT எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகள் அனைத்தையும் எண்ண உத்தரவிடக் கோரிப் பல்வேறு தரப்பினர் வழக்குத் தொடுத்தனர். இதுகுறித்து ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்ற உச்ச நீதிமன்றம், நாளை தீர்ப்பளிக்கிறது.

News April 25, 2024

முறையாகப் பராமரிக்க அப்போதே சொன்னேன்

image

திருச்சியில் அரசுப் பேருந்தின் இருக்கை உடைந்து நடத்துநர் தூக்கி வீசப்பட்டது தொடர்பாக
அரசைச் சாடியுள்ளார் இபிஎஸ். சென்னை மாநகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் கீழே விழுந்தபோதே, பேருந்துகளை முறையாகப் பராமரிக்க அரசை வலியுறுத்தியதாகக் கூறினார். மேலும், தற்போது மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளதால், அரசுப் பேருந்து மீது மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

News April 25, 2024

வீரர்களின் இறுதி மூச்சால் தேசியக் கொடி பறக்கிறது

image

மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது X தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், “காற்று அசைவதால் நமது கொடி பறக்கவில்லை, அதனைக் காத்து இறந்த ஒவ்வொரு ராணுவ வீரரின் இறுதி மூச்சால் பறக்கிறது” எனக் கூறியுள்ளார். முன்னதாக முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

News April 25, 2024

வணிகர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

image

திரவ நைட்ரஜனை உணவில் கலந்து விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பிஸ்கட், ஐஸ்கிரீம், வேஃபர் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களில் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்கும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், திரவ நைட்ரஜனை Packing Gas மற்றும் Freezant ஆக மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் அரசு விளக்கமளித்துள்ளது.

News April 25, 2024

மின்னஞ்சல்களைக் கையாள்வதில் கவனம் தேவை

image

நிறுவனங்கள் மீதான சைபர் தாக்குதல் இந்தியாவில் சராசரியை விட 90% அதிகமாக இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 6 மாதங்களில் இந்திய நிறுவனங்களை ஹேக்கர்கள் சராசரியாக 2,444 முறை ஹேக் செய்துள்ளனர். இது உலகளவில் 1,151 முறையாக உள்ளது. பெரும்பாலான சைபர் தாக்குதல்கள் மின்னஞ்சல் மூலமே நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, மின்னஞ்சல்களைக் கையாள்வதில் கவனம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!